Last Updated : 22 Mar, 2017 07:16 AM

 

Published : 22 Mar 2017 07:16 AM
Last Updated : 22 Mar 2017 07:16 AM

தினமும் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு ஜூலை 11 வரை காவிரி நீரை திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 11-ம் தேதியில் இருந்து தொடர்ச் சியாக 15 வேலை நாட்களுக்கு நடக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரை காவிரி யில் இருந்து தினமும் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை தமிழகத் துக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இவ்வழக்கு கடந்த அக்டோபரில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்க்கும் மாநில அரசுகளின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கிய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது’ என வாதிட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ‘கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட‌ மாநில அரசு களின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது’ என தெரிவித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக ந‌டுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மாநில அரசுகளின் மேல் முறையீட்டு மனு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் மனு, காவிரி நீரை திறக்க மறுத்த கர்நாடகாவிடம் ரூ.2,480 கோடி இழப்பீடு கோரும் மனு என நிறைய மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.

இந்த மனுக்களை உடனடி யாகவும், தொடர்ச்சியாகவும் விசாரித்து விரைவாக தீர்ப்பளிக்க வேண்டும். தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் கூடுதல் நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும். இதேபோல காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் கேரள அரசு அணைகட்ட முயற்சித்து வரு கிறது. இதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை கேரளா பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே கேரள அரசு அணை கட்ட தடை விதிக்க வேண்டும்’’ என வாதாடினார்.

கேரளா விளக்கம்

அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், ‘‘கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் போதிய நீர் இல்லை. தற்போது இருக்கும் குறைந்த அளவிலான நீரைக் கொண்டே பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. கோடை மழை பெய்யும் வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறந்துவிட இயலாது’’என தெரிவித் தார்.

கேரள அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.குப்தா, ‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீரையே கேரளா பயன்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கு செல்லும் நீரை கேரளா பயன்படுத்தவில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்படும் அணையால் தமிழகத் துக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. எனவே தமிழக அரசின் கோரிக் கையை ஏற்று அணை கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கூடாது’’ என வாதிட்டு அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

15 நாட்கள் இறுதி விசாரணை

அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் அணைக் கட்டுவது தொடர்பாக கேரள அரசுக்கு புதிய உத்தரவை பிறப்பிக்க முடியாது. காவிரியில் எவ்வளவு நீரை கேரளா பயன்படுத்துகிறது என்பது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசுக்கு உடனடியாக அளிக்க வேண்டும். அதில் ஆட்சேபம் இருந்தால் தமிழக அரசு தரப்பில் கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இவ்வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தர வின்படி கர்நாடக அரசு வரும் ஜூலை 11-ம் தேதி வரை தமிழகத் துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்துவிட வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வழக் கின் அடுத்த விசாரணையை வரும் ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்றைய நாளில் இருந்து தொடர்ச்சியாக 15 வேலை நாட்களுக்கு இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அடுத்த 3 மாதங்களுக்கு மேலாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாய நிலைக்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று கூறும்போது, “கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் அணைகள் எல்லாம் வறண்டு உள்ளன. கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது இருக்கும் குறைந்த அளவு நீர் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்துக்கு எப்படி காவிரி நீரை திறந்துவிட முடியும்? உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீரை திறக்க முடியாத நிலை உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்பினரும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x