Published : 23 May 2015 08:35 AM
Last Updated : 23 May 2015 08:35 AM

தாய் வெளியிட்ட விளம்பரத்தை பார்த்து தன்பாலின உறவாளர் மகனை திருமணம் செய்து கொள்ள 73 பேர் ஆர்வம்

மும்பையில் தன்பாலின உறவாளரான தனது மகனுக்கு வரன் வேண்டும் என்று தாய் ஒருவர் விளம்பரம் வெளியிட்டார். அதை பார்த்து 73 பேர் தொடர்பு கொண்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் பத்மா ஐயர். இவரது மகன் ஹரீஷ். தன்பாலின உறவாளரான இவர், திருநங்கைகள் (எல்ஜிபிடி) அமைப்பை நடத்தி வருகிறார். தன்பாலின உறவாளர் உரிமைகளுக்காக ஹரீஷ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பத்மா ஐயர் ஒரு பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘தன்பாலின உறவாளரான எனது மகன் ஹரீஷுக்குப் பொருத்த மான வரன் வேண்டும். 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை. (ஐயருக்கு முன்னுரிமை தரப்படும்). சைவம் உண்பவராக இருக்க வேண்டும். நன்கு சம்பாதிக்க வேண்டும். விலங்குகளை நேசிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்தியாவிலேயே தன்பாலின உறவாளருக்கு அதுவும் தாயே தனது மகனுக்கு வரன் தேடி விளம்பரம் வெளியிட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. அந்த விளம்பரத்துக்கு சில தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பலர் விளம்பரத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

இந்த விளம்பரத்தை சமூக வலை தளங்களிலும் ஹரீஷ் வெளியிட்டார். அதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. இதுகுறித்து ஹரீஷின் தாய் பத்மா நேற்று கூறியதாவது:

விளம்பரத்தைப் பார்த்து இதுவரை ஹரீஷை 70 பேர் தொடர்பு கொண்டு திருமணம் குறித்து பேசியுள்ளனர். எனது மகனை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக எனக்கு 73 பேர் இ மெயில் அனுப்பி உள்ளனர். நான் விளம்பரத்தில் கூறியிருந்தது போல், ஐயர் பிரிவை சேர்ந்த பலர் விருப்பம் தெரிவித்து மெயில் அனுப்பி உள்ளனர். இவ்வளவு மெயில் வந்ததை பார்த்து என் மகன் ஹரீஷ் ஆச்சரியப்பட்டு போனான். அந்த விளம்பரத்தை வெளியிட்டமைக்கு நன்றி.

இவ்வாறு பத்மா கூறினார்.

இதுகுறித்து ஹரீஷ் கூறியதாவது:

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் என்னை திருமணம் செய்து கொள்ள மெயில் வந்துள்ளது. தவிர குஜராத்திகள் பலரும் முஸ்லிம்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ, விளம்பரத்தில் நாங்கள் கூறிய அனைத்தும் பொருத்தமாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அபுதாபியில் இருந்து ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அங்குள்ள நபர் ஒருவர் திருமணத்துக்குப் பிறகு எனக்கு அவருடைய மாளிகையைக் கொடுப்பதாக கூறியுள்ளார். வரன் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

எனினும், ஐயருக்கு முன்னுரிமை என்று என் தாய் குறிப்பிட்டதை எதிர்த்து அவருக்கு 300 மெயில்கள் வந்துள்ளன. ஜாதியைப் பார்க்காமல் பரந்த மனப்பான்மையுடன் இருங்கள் என்று பல மெயில்களில் அறிவுரை கூறியுள்ளனர்.

இவ்வாறு ஹரீஷ் கூறினார்.

ஐயருக்கு முன்னுரிமை என்று கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, உடனடியாக சமூக வலைதளங்களில் பத்மா ஐயர் விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஐயருக்கு முன்னுரிமை என்று நான் குறிப்பிட்டது பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு தாயும், தனது மகன் அல்லது மகள் தங்களுக்குத் தெரிந்த கலாசாரத்தை கொண்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x