Last Updated : 22 Mar, 2017 06:29 PM

 

Published : 22 Mar 2017 06:29 PM
Last Updated : 22 Mar 2017 06:29 PM

தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டத்தின் தாக்கம்: மத்திய வறட்சி நிவாரண நிதியை வெளியிட நடவடிக்கை

தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதியை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய நதிநீர் இணைப்பு சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதலான போராட்டத்திற்கு இதன் தமிழக தலைவர் அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார். இது, தொடக்கத்தில் மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. போராட்டம் குறித்த செய்திகள் 'தி இந்து' உட்பட பல்வேறு நாளிதழ்களில் வெளியாகத் துவங்கியவுடன் இரு அரசுகளும் நேரடியாக தலையிடத் துவங்கி உள்ளன.

இதன் பலனாக நேற்று முன்தினம் மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் குழு விவசாயிகளை சந்தித்தது. இதில், அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து, மத்திய நிதித்துறை அருண்ஜேட்லி மற்றும் மத்திய நீர்பாசனத்துறையின் உமாபாரதி ஆகிய இரு அமைச்சர்களுடன் விவசாயிகள் சந்திப்பு நடைபெற்றது. இதற்கு, அதிமுக எம்பிக்கள் ஏற்பாடு செய்திருந்ததனர்.

இதேபோல், உறுதியை அதேநாள் மாலை மத்திய கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து துறையில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் விவசாயிகளை நேரில் சந்தித்து தெரிவித்திருந்தார். ராதாகிருஷ்ணனும் தாம் அளித்த உறுதியின்படி மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்குடன் இன்று மதியம் விவசாயிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

இதற்கு முன் போராட்டத்தின் இரண்டாவது நாளில் விவசாயிகளை மத்திய விவசாயத்துறை அமைச்சரிடம் சந்திக்க வைப்பதாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு அத்துறையின் இணைச்செயலாளரை மட்டும் சந்திக்க வைத்து ஏமாற்றப்பட்டிருந்தனர்.

இந்த சந்திப்பில், தமிழக அரசிற்கு அளிக்கவிருக்கும் மத்திய நிவாரண நிதி தொகை தெரிய வந்துள்ளது. இதில், தமிழக அரசு கேட்ட ரூ.39,563-ல் வெறும் ரூ1748.28 கோடி மட்டும் பரிந்துரைக்கப்பட இருப்பதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரையை ஏற்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தன்னிடம் உள்ள நிதியை பொறுத்து நிவாரணத்தொகை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணம் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து 'தி இந்து'விடம் தமிழக தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், 'நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்குடனான சந்திப்பினால் இந்த நிவாரணம் வெளியிட உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு கேட்டதை விட மிக, மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ள தொகை போதாது. எனவே, தமிழக அரசு கேட்ட 40,000 கோடி ரூபாய் அளிப்பது உட்பட எங்கள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் டெல்லியில் தொடரும்' எனத் தெரிவித்தார்.

தமிழக விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று நேரில் ஆதரவு தெரிவித்தார்.

பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட விவசாயிகள் உட்பட சுமார் 100 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60-க்கும் அதிகமான வயதுள்ளவர்கள். எனவே, இவர்களில் பலரது உடல்நிலை குன்றிவிட மத்திய அரசு சார்பில் டெல்லியில் எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனையின் மருத்துவர்கள் அனைவருக்கு பொது மருத்துவ சோதனை நடத்தினர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x