Last Updated : 06 Oct, 2016 10:45 AM

 

Published : 06 Oct 2016 10:45 AM
Last Updated : 06 Oct 2016 10:45 AM

தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி பிரச்சினையால் முடங்கிய லாரி போக்குவரத்து தொடங்கியது: விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்கும்

காவிரிப் பிரச்சினை காரணமாக தமிழகம் - கர்நாடகா இடையே கடந்த ஒரு மாதமாக முடங்கிய வாகன போக்குவரத்து பலத்த பாதுகாப்புடன் நேற்று மீண்டும் தொடங்கியது.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை கண்டித்து கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கர்நாடகாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தால், பஸ், லாரி உட்பட இரு மாநில வாகனங்களும் தமிழகம் - கர் நாடகா எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. இது தவிர இரு மாநிலங்களையும் இணைக்கும் மேட்டூர், சத்திய மங்கலம், மாதேஸ் வரன் மலை, ஊட்டி உள்ளிட்ட 16 எல்லையோர பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்ட தால் கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. அப்போது, பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் தமிழக பதிவெண் கொண்ட பேருந்து, லாரி, கார், வேன் உள்ளிட்ட 200-க்கும் மேற் பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத் தப்பட்டன.

இந்த பிரச்சினையால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில வாகனங்கள் அந்தந்த மாநில எல்லைகளிலே நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா தலைமை யிலான லாரி உரிமையாளர்கள் இரு மாநில காவல்துறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ''தமிழகம் - கர்நாடகா இடையேயான லாரி போக்குவரத்து பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் கர்நாடகாவிலிருந்து கொண்டு வரும் பொருட்களை த‌மிழக வாகனங்களுக்கும், தமிழகத்திலிருந்து கொண்டுவரும் பொருட்களை கர்நாடக வாகனங்களுக்கும் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. இதனால் லாரி உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர். இரு மாநில மக்களும் பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளினால் அவதிப்படுகின்றனர்” என விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கர்நாடக காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழக லாரிகளை மீண்டும் கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்க வேண்டும். தமிழக வாகனங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். இதேபோல தமிழக காவல் துறை அதிகாரியையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரு மாநில காவல் துறை அதிகாரிகளும் சந்தித்து பேசி, வாகனங்களை இயக்க அனுமதி வழங்கினர்.

இதையடுத்து நேற்று கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இரு மாநில போலீஸாரின் பாதுகாப்புடன் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன. இதே போல கோவை - மைசூரு இடையே யான போக்குவரத்தும் பலத்த பாதுகாப்புடன் நேற்று தொடங்கி யது. ஒரு மாதத்துக்கு பிறகு இரு மாநிலங்களுக்கிடையே வாகன‌ போக்குவரத்து தொடங்கியுள்ள தால் இரு மாநில எல்லையோர மக்களும், வர்த்தகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரு மாநிலங்களுக்கிடையில் விரைவில் பஸ் போக்குவரத்தும் தொடங்கப்படும் என இரு மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x