Last Updated : 30 Dec, 2016 10:27 AM

 

Published : 30 Dec 2016 10:27 AM
Last Updated : 30 Dec 2016 10:27 AM

தந்தை முலாயமுடன் அகிலேஷ் மோதல்: போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியிட முடிவு

உ.பி.யில் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்துள்ள முதல்வர் அகிலேஷ், தனது தந்தையை எதிர்த்து போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

உ.பி.யில் முதல்வர் அகிலேஷ் யாதவ் - அவரது சித்தப்பா சிவபால் யாதவ் இடையே கடந்த பல மாதங்களாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட் பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ் நேற்று முன் தினம் வெளியிட்டார். கட்சியின் மாநிலத் தலைவரும் முலாயமின் தம்பியுமான சிவபால் யாதவ் அப்போது உடனிருந்தார்.

மொத்தமுள்ள 403 தொகுதி களில் 325 தொகுதிகளுக்கு வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் தற்போதைய எம்எல்ஏக்கள் 176 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவ் ஆதரவு அமைச் சர்கள் பலரது பெயர்களும் 50-க்கும் மேற்பட்ட தற்போதைய எம்எல்ஏக்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. மேலும் முதல்வர் வேட்பாளராக அகிலேஷை அறிவிக்க முலாயம் மறுத்தார்.

மாறாக, சிவபால் யாதவ் உட்பட அகிலேஷ் யாதவால் கடந்த சில மாதங்களில் அமைச் சரவையில் இருந்து நீக்கப்பட்ட 10 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அகிலேஷுக்கு எதிராக வெளிப் படையாக பேசியவர்கள் ஆவர்.

இதுகுறித்து அகிலேஷ் கூறும்போது “வெற்றி வாய்ப் புள்ள பலரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. சிறப்பாக பணியாற்றிய சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு எனது தந்தையிடம் வலியுறுத்து வேன்” என்று கூறினார். மேலும் சிவபால் யாதவுக்கு தரும் பதிலடியாக அவரது ஆதர வாளர்கள் இருவரின் அரசுப் பதவியை நேற்று முன்தினம் இரவு பறித்தார்.

மேலும், அகிலேஷ் தனது தந்தை முலாயம் சிங்கை சந்தித்து வேட்பாளர் பட்டியலுக்கு அவர் ஆட்சேபத்தை தெரிவித்த தாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில் அகிலேஷ், தனது ஆதரவாளர்கள் 167 பேரின் பெயர்களுடன் போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று நேற்று தகவல் வெளியானது.

தேர்தல் நேரத்தில் சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் குடும்பச் சண்டையால் உ.பி. அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x