Last Updated : 14 Aug, 2015 06:36 AM

 

Published : 14 Aug 2015 06:36 AM
Last Updated : 14 Aug 2015 06:36 AM

டெல்லி செங்கோட்டையில் நாளை சுதந்திர தின விழா: பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் வீரர்கள் - பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி மாநகரம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாது காப்புப் படையினர் பல அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

நாட்டின் 69-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப் பட உள்ளது. டெல்லி செங்கோட்டை யில் நடைபெற உள்ள விழாவில் பிரதமர் மோடி 2-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் குறிப்பாக சுதந்திர தின விழா நடைபெற உள்ள செங்கோட்டைக்கு உள்ளும் அதைச் சுற்றி உள்ள இடங்களிலும் துணை ராணுவப் படை மற்றும் டெல்லி போலீஸைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மாநகரம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் போலீஸார் சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தீவிரவாத தாக்குதல் ஏதேனும் நடந்தால் அதை முறியடிக்கும் வகையில், தரை முதல் வான் வெளி வரையில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதியில் மட்டும் 6 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

17-வது நூற்றாண்டைச் சேர்ந்த முகலாயர் கோட்டை அருகே உள்ள உயரமான கட்டிடங்கள் மீது தேசிய பாதுகாப்புப் படையின் குறி தவறாமல் சுடுவதில் தேர்ந்த வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் மற்றும் இதர முக்கியப் பிரமுகர்கள் செங்கோட்டை நோக்கி வரும் பாதைகளில் இந்த ஆண்டு கூடுதலாக கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. செங்கோட்டை பகுதி யில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகளை கண் காணிப்பதற்காக மையப்படுத்தப் பட்ட கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. அதிரடிப் படை, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உள்ளிட்ட நிபுணத்துவ பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

செங்கோட்டை அமைந்துள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளன.

வான் வழியில் தாக்குதல் ஏதாவது நடத்தப்பட்டால் அதை முறியடிக்க விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

செங்கோட்டைக்கு செல்வதற்கு முன்பு ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளதால் அப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, நட்சத்திர ஓட்டல்களில் தங்குபவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்கள், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்குள் கேமராக் கள், பைனாகுலர்கள், கைப்பைகள், சூட்கேஸ்கள், டிரான்சிஸ்டர்கள், டிபன் பாக்ஸ், செல்போன்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட வற்றைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்று குடியரசுத் தலைவர் உரை

நாட்டின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரையாற்றுகிறார்.

இதுகுறித்து அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: இன்று இரவு 7 மணி முதல் அனைத்திந்திய வானொலியிலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் ஒலி/ஒளிபரப்பப்பட உள்ளது. அதன் பிறகு குடியரசுத் தலைவரின் உரை இந்தியில் தொடரும். பின்னர் இரவு 8 மணி முதல் அனைத்திந்திய வானொலி மூலமாக பிராந்திய‌ மொழிகளிலும், தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்கள் மூலமாக பிராந்திய மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x