Last Updated : 26 Jan, 2015 10:22 AM

 

Published : 26 Jan 2015 10:22 AM
Last Updated : 26 Jan 2015 10:22 AM

டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தினவிழா - ராஜ பாதையில் அணிவகுப்பை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா பார்வையிட்டனர்

நாட்டின் 66-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

நாட்டின் ராணுவ வலிமை யையும் பல்வேறு கலாச்சாரத் தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

குடியரசு தின விழாவில் முதன்முறையாக அமெரிக்க அதிபர் கலந்துகொண்டதால், டெல்லியில் வரலாறு காணாத வகையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 80 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னமான ‘அமர் ஜவான் ஜோதி’யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினர் ஒபாமா, அவரது மனைவி மிஷெல் உள்ளிட்டோர் குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிறகு, 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து முப்படை களின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் ராஜபாதையில் அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத சிறப்பு கண்ணாடி கூண்டில் பிரணாப் முகர்ஜி, ஹமீது அன்சாரி, நரேந்திர மோடி, ஒபாமா, மிஷெல் ஒபாமா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அமர்ந்தனர். பின்னர் அணிவகுப்பு தொடங்கியது.

முக்கியப் பிரமுகர்களுக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப் பட்டாலும், விமானப்படை சாகசங் களை பார்ப்பதற்காக அதில் மேற்கூரை அமைக்கப்படு வதில்லை. இதனால் விழாவின் போது லேசாக மழை பெய்ததால் அனைவரும் குடை பிடித்தபடி நிகழ்ச்சிகளை பார்த்தனர்.

கண்கவர் பேரணி

இவ்விழாவில் முதன்முறை யாக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த பெண் படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்துகொண்டன. ராணுவ வீரர்களின் வீர, தீர சாகசம் மற்றும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஒபாமா பார்த்து ரசித்தார்.

எல்லைப் பாதுகாப்பு படையின் டேர்டெவில்ஸ் வீரர்கள் ஓடும் மோட்டார் சைக்கிளில் மனித கோபுரம் அமைத்து சாகசம் நிகழ்த்தியதைப் பார்த்து ஒபாமா கைதட்டி ரசித்தார். குழந்தைகளின் நடனத்தை மிஷெல் ஒபாமா மிகவும் ரசித்தார்.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம் ஆகியவற்றையும் ரசித்து பார்த்த ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடியிடம் அதுபற்றி விளக்கமாக கேட்டறிந்தார்.

கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக அண்மையில் வாங்கப்பட்ட பி-81 போர் விமானம் மற்றும் மிக்-29 ரக போர் விமானம், ஏவுகணைகள், எதிரி நாட்டு ஆயுதங்களைக் கண்டறியும் ராடார் ஆகியவை அணிவகுத்து வந்தன. அதிநவீன ராணுவ டாங்கிகள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் பேரணியில் இடம்பெற்றன.

இதுபோல விமானப்படை, கடற்படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் போர் தளவாடங்கள் பேரணியின்போது காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கும் வகையில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் சார்பிலும் வண்ணமயமான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x