Published : 08 Nov 2016 08:25 AM
Last Updated : 08 Nov 2016 08:25 AM

டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அனல் மின் நிலையம், ஆலைகள் மூடல்: பழைய வாகனங்கள் நுழைய தடை

டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நச்சு வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் காற்றுமாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. டெல்லி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்று பல்வேறு கட்டுப் பாடுகளை அறிவித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கட்டுமானங்கள் மற்றும் கட்டிடங்களை இடிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டு கள் பழமையான வாகனங்களும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங் களும் நகருக்குள் நுழைய அனுமதி யில்லை.

காற்று மாசுவை ஏற்படுத்தும் அனைத்து ஆலைகளும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும். மத விழாக்கள் தவிர்த்து திருமணம் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

இவ்வாறு துணைநிலை ஆளுநரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து டெல்லியின் பதார்பூர் பகுதியில் செயல்படும் பொதுத்துறை நிறுவன மான அனல் மின் நிலையம் நேற்று மூடப்பட்டது. அடுத்த 10 நாட்கள் ஆலைக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல டெல்லி சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள வேறு சில தனியார் ஆலைகளும் மூடப்பட்டன.

டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பணிகள் அனைத்தும் நேற்று நிறுத்தப்பட்டன. அடுத்த 5 நாட்களுக்கு எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறாது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல அரசின் உத்தரவின்படி தனியார் கட்டுமானப் பணிகளும் நேற்று நிறுத்தப்பட்டன.

சாலைகளில் தூசு பறப்பதைத் தடுக்க தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ‘வேக்கம் கிளீனர்’ கருவிகள் மூலம் சாலையில் தூசுக்கள் அகற்றப்படுகின்றன. இந்தப் பணி அடுத்த ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. குப்பைக்கிடங்குகளில் அடுத்த 10 நாட் கள் எந்த பொருளையும் எரிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒற்றை, இரட்டை இலக்க வாகன கட்டுப்பாடு திட்டத்தையும் டெல்லி அரசு மீண்டும் அமல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இன்று விசாரணை

இதனிடையே டெல்லி காற்று மாசுபாட்டை கண்காணிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) தாக்கல் செய்த இம்மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூடன், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x