Last Updated : 23 May, 2015 07:09 PM

 

Published : 23 May 2015 07:09 PM
Last Updated : 23 May 2015 07:09 PM

சர்ச்சைக்குரிய கடல் விமான திட்டத்துக்கு கோவா அரசு அனுமதி

மீனவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடல் விமான திட்டத்துக்கு கோவா அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து சோதனை முயற்சியாக இயக்கப்பட்ட இந்த விமானம் மந்தோவி ஆற்றுப் பகுதியில் தரை இறங்கியது. வரும் செப்டம்பர் மாதத்தில் வர்த்தக ரீதியாக இந்த சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா மாநில சுற்றுலாத் துறை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடல் விமானத்தை இயக்க முடிவு செய்தது. இதற்காக மாரிடைம் எனர்ஜி ஹெலி ஏர் சர்வீஸஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் கடல் விமான சேவையை வழங்கும் 2-வது மாநிலமாக கோவா உருவெடுக்கும். மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கெனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

தண்ணீர், தரை ஆகிய இரண்டு விதமான பரப்பிலிருந்தும் புறப்பட்டு தரையிறங்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேர் பயணம் செய்யலாம். நீர்நிலைகளுக்கு இடையே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்ய படகைப் பயன்படுத்துவதற்கு பதில் இந்த விமானம் பயன்படுத்தப்படும்.

இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் கருதுகின்றனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும், திட்டமிட்டபடி இந்த திட்டத்தை செயல்படுத்த கோவா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடல் விமானத்தை இயக்க கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பருலேகர் நேற்று அனுமதி வழங்கினார். இதையடுத்து, தபோலிம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கடல் விமானம், மந்தோவி ஆற்றுப் பகுதியில் நேற்று காலை 11.45 மணிக்கு தரையிறங்கியது.

இதுகுறித்து அமைச்சர் பருலேகர் கூறும்போது, “மீனவர்களின் நலனில் அரசுக்கு அக்கறை உள்ளது. இந்த திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. சுற்றுலாப் பயணிகளைக் கவரவும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவும். சுற்றுலாத் துறையை மேம்படுத்து வேண்டுமானால் புதுமையை புகுத்த வேண்டியது அவசியம்” என்றார்.

இதுகுறித்து மாநில சுற்றுலாத் துறை இயக்குநர் அமே அபயங்கர் கூறும்போது, “சுற்றுச்சூழல், மீன் பிடி தொழில் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் வழித்தடங்களை அடையாளம் காண்பது குறித்து, மீன்வளத் துறை, துறைமுக கேப்டன் மற்றும் கோவா கடலோர போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x