Last Updated : 05 Jan, 2017 06:47 PM

 

Published : 05 Jan 2017 06:47 PM
Last Updated : 05 Jan 2017 06:47 PM

சமாஜ்வாதியுடனான கூட்டணிக்கு காங்கிரஸ் ஜனவரி 15 வரை காத்திருக்க முடிவு

உபியில் ஆளும் சமாஜ்வாதியுடனான கூட்டணிக்கு ஜனவரி 15 வரை காங்கிரஸ் காத்திருக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு அக்கட்சித் தலைவர்களின் குடும்ப சண்டை தீராமல் இருப்பது காரணம் ஆகும்.

பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை என 5 மாநிலங்களுக்கான சட்டபேரவை தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உபியில் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரம் துவங்கி விட்டது. இங்கு போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். இவற்றில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆகியோர் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு விட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் தான் போட்டியிடும் தொகுத்களை இன்னும் முடிவு செய்யாமல் வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு அக்கட்சிக்கு சமாஜ்வாதியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடும் எண்ணம் இருப்பது காரணம் ஆகும்.

இதற்கான ரகசிய பேச்சு வார்த்தை அகிலேஷுடன் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியிருந்தது. இதற்கிடையே, சமாஜ்வாதி தலைவர்களின் குடும்ப மோதல் வெடித்து கட்சி பிளவுபட்டுள்ளது. இது மீண்டும் ஒன்று சேர முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷுக்கு இடையே பேச்சுவார்த்தை மூன்றாவது நாளாகத் தொடருகிறது. இதன் இறுதி முடிவை அறிந்த பின் தன் வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை காத்திருக்கவும் காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளரான ஷீலா தீட்சித் கருத்து கூறியுள்ளார். சமாஜ்வாதியுடனான கூட்டணி முடிவானால், தான் முதல் அமைச்சர் வேட்பாளர் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைமையின் கட்டளைக்கு கீழ்படியாமல் எந்தவிதமான எதிர்ப்பையும் காட்ட மாட்டேன் எனவும் ஷீலா கூறியுள்ளார்.

உபியில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 125 ஐ காங்கிரஸ் மற்றும் அஜீத்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம்(ஆர்எல்டி) கட்சிக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது. இதன்மூலம், சமாஜ்வாதியின் அக்லேஷ், காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் ஆர்எல்டியின் ஜெயந்த் சவுத்ரி என மூன்று இளைஞர்கள் இணைந்து ஒரு இளம் கூட்டணியாக இருக்கும் எனக் கருதப்பட்டது. இதனால், உபியில் சுமார் 19 சதவிகிதம் உள்ள முஸ்லீம் வாக்குகள் இந்த இளம் கூட்டணிக்கே கிடைக்கும் எனவும், இதன்மூலம் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த வருடம் புத்தாண்டை இந்தியாவிற்கு வெளியே கொண்டாடக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். இதற்காக வெளிநாடு சுற்றுலாவில் சென்றவர் அதை முடித்து ஜனவரி 11-ல் திரும்ப உள்ளார். இதன் பிறகு டெல்லியின் டால்கட்டோரா அரங்கில் காங்கிரஸ் நடத்தும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் பிரதமர் நரேந்தர மோடிக்கு எதிரான மாபெரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதை அடுத்து ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில் இறுதி முடிவை காங்கிரஸ் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x