Last Updated : 31 Jan, 2017 08:52 PM

 

Published : 31 Jan 2017 08:52 PM
Last Updated : 31 Jan 2017 08:52 PM

சமாஜ்வாதிக்குள் முற்றுகிறது மோதல்: புதிய கட்சியை தொடங்குகிறார் சிவ்பால் யாதவ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் புதிய கட்சி தொடங்கப் போவதாக சமாஜ்வாதி மூத்த தலைவரும், முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான சிவ்பால் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.

முலாயம் சிங்கிடம் இருந்து சமாஜ்வாதி கட்சியின் அதிகாரத்தை அகிலேஷ் யாதவ் கைப்பற்றிய நாள் முதலாக அவரது சித்தப்பா சிவ்பால் சிங் யாதவ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பேச்சாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் சிவ்பால் யாதவ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜஸ்வந்த்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘‘தேர்தலில் போட்டியிடுவதற்கான டிக்கெட் எனக்கு வழங்கப்பட்டது. இல்லாவிட்டால் சுயேச்சையாக நின்றிருப்பேன். எனது ஆதரவாளர்களும் நான் சுயேச்சையாக நிற்க வேண்டும் என்று தான் விரும்பினார்கள். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை முலாயம் சிங்குக்கு பக்கபலமாக இருப்பேன். அதே சமயம் கட்சியில் அவரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மார்ச் 11-க்கு பிறகு நான் புதிய கட்சியை தொடங்கப் போகிறேன். அகிலேஷ் புதிய அரசு அமைக்கட்டும். நான் புதிய கட்சியை அமைக்கிறேன்’’ என்றார்.

இதற்கிடையில் இது குறித்து கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிவ்பால் யாதவின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x