Last Updated : 30 Jan, 2017 10:33 AM

 

Published : 30 Jan 2017 10:33 AM
Last Updated : 30 Jan 2017 10:33 AM

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ரூ.96 கோடி ரொக்கம் ரூ.25 கோடி மது பறிமுதல்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் இதுவரை 96 கோடி ரொக்கமும் ரூ.25 கோடி மதிப்பிலான மதுவும் ரூ.19.93 கோடி மதிப்பிலான போதை மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 4, மார்ச் 8 இடையே தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் மார்ச் 11-ம்தேதி எண்ணப்படுகிறது.

பணம், மது உள்பட இதர பொருள்களை கொடுத்து வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் முயற்சிக்கக்கூடும் என்பதால், அதை கண்காணித்து தடுப்பதற்காக, 200 பேர் கொண்ட செலவு கண்காணிப்பு குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இக்குழு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரையில், ஏராளமான ரொக்கம், மது மற்றும் போதை மருந்துகளை இக்குழு பறிமுதல் செய்துள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், பஞ்சாபில்தான் அதிக அளவுக்கு ரொக்கமும் மதுவும் சிக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவாக ரூ.87.67 கோடியும், பஞ்சாபில் ரூ.6.6 கோடியும், கோவா மாநிலத்தில் ரூ.1.27 கோடியும், உத்தராகண்டில் ரூ.47.06 லட்சமும், மணிப்பூரில் ரூ.8.13 லட்சமும் ரொக்கமாக சிக்கியுள்ளது.

வாக்காளர்களுக்கு விநி யோகிப்பதற்காக பதுக்கி வைத்திருந்த மது பறிமுதலிலும் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் ரூ.20.62 கோடி மதிப்பிலான 8.01 லட்சம் லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ரூ.2.69 கோடி மதிப்புள்ள 5 லட்சம் லிட்டர் எரிசாராயம், உத்தராகண்டில் ரூ.93.91 லட்சம் மதிப்புடைய 36 ஆயிரம் லிட்டர் மது, கோவாவில் ரூ.81.80 லட்சம் மதிப்புள்ள 71 ஆயிரம் லிட்டர் மது, கோவாவில் ரூ.15.14 லட்சம் மதிப்புமிக்க எரிசாராயமும் சிக்கியுள்ளன.

போதை மருந்துகளைப் பொருத்தமட்டில் பஞ்சாபில்தான் அதிக அளவாக ரூ.19.83 கோடி மதிப்புக்கு சிக்கியுள்ளது. இதன் எடை 4,774 கிலோ ஆகும். கடந்த 10 நாட்களில் போதை மருந்து பறிமுதல் அளவு இரட்டிப்பாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x