Published : 17 Mar 2017 10:07 AM
Last Updated : 17 Mar 2017 10:07 AM

சசிகலா சிறை சென்று ஒரு மாதம் நிறைவு

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, அங்கு ஒரு மாத சிறைவாசத்தை நிறைவு செய்திருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள், நேற்று முன்தினத்துடன் ஒரு மாத சிறைவாசத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் சசிகலாவைச் சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகிய மூவரும் சசிகலாவைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். டிடிவி தினகரன் கடந்த மாதத்தில் 2 முறை சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்.

மற்றபடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் யாரும் சந்திக்கவில்லை. அதிமுக நிர்வாகிகளும் சிறைக்குச் சென்று சசிகலாவைப் பார்க்கவில்லை.

தொடக்கத்தில் பெங்களூருவில் தங்கியிருந்த இளவரசி மகன் விவேக், மருமகள் கீர்த்தனா ஆகியோர் ஓரிரு முறை சசிகலாவைச் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்களும் சென்னைக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சசிகலாவைப் பார்க்க உறவினர்களும் வரவில்லை.

கட்சியினர், உறவினர்களின் சந்திப்பு இல்லாததால் சசிகலா அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x