Published : 01 Aug 2015 10:43 AM
Last Updated : 01 Aug 2015 10:43 AM

கோககோலாவுக்கு எதிராக புகார்: நாடாளுமன்ற துளிகள்

மக்களவை, மாநிலங்களவையில் நேற்று பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்கள் பின்வருமாறு:

தனியாரிடம் நெடுஞ்சாலை பராமரிப்பு

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: நெடுஞ்சாலைத் துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக, ஏல நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யோசனை, திட்டமிடல் நிலையில்தான் உள்ளது.

10 ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு

நீர்வள ஆதாரத்துறை இணையமைச்சர் சன்வர் லால் ஜாட்: வரும் 2025-ம் ஆண்டு இந்தியாவின் குடிநீர் இருப்பு மிகவும் குறைவாக இருக்கும். இந்தியா தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் ஆண்டு சராசரி நீர் அளிப்பு 1 லட்சத்து 86 ஆயிரத்து 900 கோடி கன மீட்டர்களாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், பயன்படுத்தத்தக்க நீரின் இருப்பு 1 லட்சத்து 12 ஆயிரத்து 300 கோடி கன மீட்டர்கள்தான் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தேசிய ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேம்பாட்டு ஆணையம் 1999-ம் ஆண்டு அளித்த அறிக்கையின்படி, 2025-ம் ஆண்டு நீரின் தேவை 84 ஆயிரத்து 300 கோடி கன மீட்டர்களாகவும், 2050-ம் ஆண்டு 1 லட்சத்து 18 ஆயிரத்து கோடி கன மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிட் தாக்குதலுக்கு இலவச சிகிச்சை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா: புதிதாக மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும்படி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தும்படி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் கடிதம் எழுதியுள்ளது.இதுதொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை மட்டுமின்றி, மருந்துகள், படுக்கை, உணவு ஆகியவை கிடைப்பதையும் உறுதி செய்யும்படி சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோககோலாவுக்கு எதிராக புகார்

நீர்வள ஆதாரத்துறை இணையமைச்சர் சன்வர் லால் ஜாட்: நிலத்தடி நீர் உறிஞ்சுதல் விதிமுறைகளை மீறுவதாக, இந்துஸ்தான் கோக கோலா நிறுவனம் மீது தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து மூன்று புகார்கள் கடந்த இரு ஆண்டுகளில் பெறப்பட்டுள்ளன.அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி, விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி: நடப்பு ஆண்டில் ஏப்ரலில் இருந்து தற்போதுவரை பெண்களுக்கு எதிரான, குடும்ப வன்முறை, அத்துமீறல், வரதட்சிணை கொடுமை, சொத்து விவகாரங்கள், பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக

9,700 வழக்குகள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட் டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம். நடப்பு நிதியாண்டில் இதுவரை அங்கு 6,110 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் வரதட்சிணை மரணம் கடந்த 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் முறையே 8,233, 8,083, 8,455 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 24,771 பெண்கள் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக உ.பி.யில் 7,048 பெண்கள் இறந்துள்ளனர்.

திருச்சியில் கேந்திர வித்யாலயா

ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா: மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், “ரயில்வே ஊழியர் குழந்தைகளின் கல்விக்காக ரயில்வே – மனிதவள மேம்பாட்டுத் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ரயில்வே அளித்துள்ள நிலத்தில் 12 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி, பொன்மலையில் இதற்கான அனுமதி தரப்பட்டுள்ளது” என்றார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய அரிசி

வேளாண் துறை இணைய அமைச்சர் சவ்சீவ் குமார் பால்யான்: மாநிலங்களையில் கூறும்போது, “சர்க்கரை அளவு குறைந்த 3 அரிசி ரகங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ஐதராபாத்) கண்டறிந்துள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரகங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x