Last Updated : 16 Sep, 2016 10:39 AM

 

Published : 16 Sep 2016 10:39 AM
Last Updated : 16 Sep 2016 10:39 AM

கேரளப் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: 7 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கேரள இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, 7 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்தவர் சவுமியா (23). கடந்த, 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி எர்ணாகுளம்-சோரன்பூர் ரயிலில் பயணித்தபோது, கோவிந்த சாமி என்பவரால் தாக்கப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.

கோவிந்தசாமியும் சவுமியா வுடன் கீழே குதித்து, வல்லத்தோல் நகர் பகுதியில் பாலியல் பலாத் காரத்தில் ஈடுபட்டுள்ளார். பலத்த காயங்களுடன் திரிச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட சவுமியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவ்வழக்கில், கோவிந்த சாமிக்கு எதிராக பாலியல் பலாத் காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, ஏற்கெனவே 8 வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடு படுவதை வாடிக்கையாக கொண் டிருப்பதை கருத்தில்கொண்டு, இவ்வழக்கை விசாரித்த திரிச்சூர் விரைவு நீதிமன்றம், கோவிந்த சாமிக்கு மரண தண்டனை விதித்து, 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

பின்னர், 2013 டிசம்பர் மாதத்தில் கேரள உயர்நீதிமன்றமும் இத் தீர்ப்பை உறுதி செய்தது. இதை எதிர்த்து கோவிந்தசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி.பன்த், யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, 7 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கோவிந்தசாமிக்கு எதிராக பாலியல் பலாத்காரம், தீவிர காயம் ஏற்படும் வகையில் தாக்கி வழிப்பறி செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை உறுதி செய்த பெஞ்ச், கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x