Published : 03 Jul 2017 09:47 AM
Last Updated : 03 Jul 2017 09:47 AM

குழந்தைகளின் இளங்கலை பட்டப்படிப்பு வரை ரூ.12 லட்சம் செலவிடும் இந்திய பெற்றோர்கள்: புதிய ஆய்வில் தகவல்

தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சராசரியாக ரூ.12.22 லட்சம் வரை செலவு செய்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயம் உலக சராசரியை விட இந்த தொகை மிகவும் குறைவு என கூறப்பட்டுள்ளது.

ஹெச்எஸ்பிசி வங்கி சார்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தோனேஷியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், பிரிட்டன், அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் உள்ள 8,481 பெற்றோர்களிடம் ‘கல்வியின் மதிப்பு’ என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கல்விக்காக அதிகம் செலவழிக்கும் நாடுகள் எது என்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்ட முதல் 15 இடங்களில் இந்தியாவுக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்திய பெற்றோர்கள் சராசரியாக ரூ.12.22 லட்சம் செலவு செய்கின்றனர். இதில் பள்ளி அல்லது பல்கலைக்கழக கல்வி கட்டணம், புத்தகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளும் அடக்கம்.

இதுகுறித்து ஹெச்எஸ்பிசியின் இந்திய பிரிவுத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி மிகவும் முக்கியம். எனவே தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக அமைய கல்விக்காக கூடுதல் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்க இந்திய பெற்றோர்கள் தயாராகவே இருக்கின்றனர்’’ என்றார்.

இந்த ஆய்வில் தங்களது குழந்தைகளின் தற்போதைய கல்வி நிலைக்கு தேவையான நிதி வழங்கி உதவ 89 சதவீத இந்திய பெற்றோர்கள் தயாராக இருப்பதாகவும், அதில் 87 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முதுநிலை பட்டப்படிப்பை முடிப்பது அவசியம் என்றும் கருதுகின்றனர்.

இந்திய பெற்றோர்களில் 59 சதவீதம் பேர் தங்களது வரு வாயில் இருந்தும், 48 சதவீதம் பேர் பொது சேமிப்பு, முதலீடுகள், காப்பீடுகளில் இருந்தும், 30 சதவீதம் பேர் குறிப்பிட்ட கல்வி சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்களில் இருந்தும் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

முதலிடத்தில் ஹாங்காங்

இந்தியாவுக்கு அடுத்தபடியாக எகிப்து உள்ளது. அந்நாட்டு பெற்றோர்கள் சராசரியாக ரூ.10.88 லட்சம் வரை செலவிடுகின்றனர். கடைசி இடம் பிடித்துள்ள பிரான்ஸில், பெற்றோர்கள் சராசரியாக ரூ.10.80 லட்சம் வரை தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக செலவிட்டு வருகின்றனர்.

இந்தப் பட்டியலில் ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு சராசரியாக ரூ.85 லட்சம் வரை செலவிடுகின்றனர். அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரகம் (ரூ.64 லட்சம்) மற்றும் சிங்கப்பூர் (ரூ.45 லட்சம்) இடம்பிடித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x