Last Updated : 31 Jan, 2017 01:06 PM

 

Published : 31 Jan 2017 01:06 PM
Last Updated : 31 Jan 2017 01:06 PM

கறுப்புப் பணத்தை ஒழிக்கவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரணாப் உரை

கறுப்புப்பணத்தை, ஊழலை, கள்ள நோட்டுகளை, தீவிரவாதிகளுக்குச் செல்லும் பணத்தை ஒழிக்கவே அரசு, பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை முன்வைத்து விளக்கினார்.

கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்:

* கறுப்புப்பணத்தை, ஊழலை, கள்ள நோட்டுகளை, தீவிரவாதிகளுக்குச் செல்லும் பணத்தை ஒழிக்கவே அரசு, பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தது.

* துல்லியத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் தொடர்ச்சியான ஊடுருவல்களுக்கு இந்தியா தக்க பதிலடி அளித்தது.

* வீடில்லாத அனைவருக்கு உரிய மானியத்தோடு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

* நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் இன்னமும் இருளில் மூழ்கியிருந்த 18,000 கிராமங்களில் 11,000 கிராமங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

* அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஐந்து கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்துள்ள 1.5 கோடி பேரில் 37% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராவர்.

* பிரதான் கவ்ஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

* உலகளாவிய தரத்தில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் 50 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

* அரசியலமைப்புச் சாசனத்தின்படி பின்தங்கிய மற்றும் அதிகாரம் இல்லாத பிரிவுகளுக்கு, சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தைப் பேணுவதை அரசு உறுதி செய்துள்ளது.

* ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், இரண்டரை லட்சம் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு உதவ அரசு திட்டமிட்டுள்ளது.

* அரசின் அனைத்துத் திட்டங்களும் ஏழைகளுக்கும், பின் தங்கியவர் மக்களுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டவை.

* இந்த ஆண்டு இறுதிக்குள் வடகிழக்கு மாநிலங்களில் அகல ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

* அரசாங்கம் நடைமுறைகளை எளிதாக்கியது; வழக்கொழிந்து போன சட்டங்களை நீக்கியது; ஊழலின் மீதிருந்த நம்பிக்கையை அழித்தது.

* மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும், தேர்தலுக்கான நிதி குறித்தும் ஆக்கபூர்வமான விவாதத்துக்கு அனைவரையும் அழைக்கிறேன்.

* இடது சாரி தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது.

* தீவிரவாதத்தை முறியடிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் இந்தியா கைகோக்கும்.

* ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சிகள், தீவிரவாத சம்பவங்கள், உயிரிழப்புகள் பெரும் கவலை அளிப்பதாக உள்ளன.

நாளை பட்ஜெட்:

பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய, நாளை(புதன்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்முறையாக ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளது.

வரும் 9-ம் தேதி பட்ஜெட் தொடரின் முதல் பகுதி நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து மீண்டும் மார்ச் 9-ம் தேதி இரண்டாம் பகுதி கூட்டத் தொடர் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே இந்த கூட்டத்தொடரில் பண மதிப்பு நீக்க விவகாரத்தை மீண்டும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பட்ஜெட் தொடரின் முதல் 2 நாட்களை புறக்கணிக்க திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x