Published : 22 Mar 2014 10:33 AM
Last Updated : 22 Mar 2014 10:33 AM

கட்சி பொதுக் கூட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி: தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிவப்பு நாடா முறை ரத்து

இந்நிலையில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுவதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சிவப்பு நாடா நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

இதனைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் ஒற்றைச் சாளர முறையில் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் ‘ஒற்றைச் சாளர அனுமதி பிரிவு’ தொடங்க ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறை தொடர்பாக அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அனுமதி

ஒற்றைச் சாளர அனுமதி பிரிவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஊழியர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி நியமிக்க வேண்டும். அந்தக் குழுவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரும் மனுக்களைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட வட்டார தேர்தல் அலுவலர்களின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

டி.எஸ்.பி. அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி ஒற்றைச் சாளர அனுமதி பிரிவில் முகாமிட்டு பொதுக்கூட்டங்களுக்கான அனுமதியை உடனுக்குடன் வழங்க வேண்டும். சில சிக்கலான பிரச்சினைகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்புதல் பெற்று முடிவெடுக்கலாம்.

மேலும் பொதுக்கூட்டம், பேரணிகளின்போது அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், வாகனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரியும் ஒற்றைச் சாளர அனுமதி பிரிவில் இடம்பெற வேண்டும்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை

முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மனுக்களை பரிசீலிக்க வேண்டும். எந்த மனுவாக இருந்தாலும் 36 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். அதற்கு மேல் தேங்கியிருக்கும் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியார் ஹெலிபேடுகளை பயன்படுத்துவோர் அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரம், அதில் பயணம் செய்வோரின் பெயர்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும் என்று ஆணைய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெற புதிய நடைமுறையை ஆணையம் அறிமுகப்படுத்தியிருப்பதால் சட்டம்- ஒழுங்கு போலீஸ், போக்குவரத்து போலீஸ் என அனுமதி உத்தரவுக்காக அரசியல் கட்சிகளோ,வேட்பாளர்களோ இனிமேல் அலைய வேண்டிய அவசியமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x