Last Updated : 09 Jan, 2015 04:17 PM

 

Published : 09 Jan 2015 04:17 PM
Last Updated : 09 Jan 2015 04:17 PM

கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாததால் திருப்பம்: ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு தேவையான பெரும்பான்மையை திரட்ட அரசியல் கட்சிகள் தவறியதை அடுத்து நேற்று ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

87 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிடிபி, பாஜக கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியும் ஈடேறவில்லை.

இதனால் குறித்த காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இடைக்கால முதல்வர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஆளுநர் என்.என்.வோராவிடம் ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக, ஆளுநர் இதுதொடர்பான ஒரு அறிக்கையை குடியரசுத்தலைவருக்கு நேற்று முன்தினம் இரவு அனுப் பினார்.

“எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான போதிய எம்எல்ஏக்களை திரட்ட எந்த கட்சியாலும் முடியவில்லை. இதுவரை யாரும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. எனவே, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தலாம்” என ஆளுநர் தமது அறிக்கையில் கூறியிருப்பதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிந்துரை செய்திருந்தார்.

அரசமைப்பு சட்ட இயந்திரங்கள் தோல்வியுறும் நிலையில், ஆளுநர் ஆட்சியை பிரகடனப்படுத்த ஜம்மு காஷ்மீர் அரசமைப்பு சட்டத்தின் 92-வது பிரிவு அனுமதிக்கிறது. இதன்படி அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 1977-ம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவது இது 6-வது தடவையாகும்.

தேர்தல் முடிவு கடந்த டிசம்பர் 23-ம் தேதி வெளியானது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஒமர் அப்துல்லாவை புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராக தொடருமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

2 வாரத்துக்கு மேல் ஆன பிறகும் 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள மக்கள் ஜனநாயக கட்சியோ அல்லது 25 இடங்களை வென்ற பாஜகவோ ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை.

தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க 44 உறுப்பினர்கள் தேவை. தற்போதைய சட்டசபையின் காலம் ஜனவரி 19-ல் முடிகிறது. அதற்குமுன் ஆட்சி அமைத்தாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x