Published : 01 Aug 2015 01:08 PM
Last Updated : 01 Aug 2015 01:08 PM

ஐஎஸ், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இந்தியா வியூகம்

ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களிடம் இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கப்படுவது, நாட்டில் அந்த அமைப்புகள் வேரூன்றாமல் இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வியூகம் வகுத்து வருகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு சனிக்கிழமை அவசரமாக டெல்லியில் கூடுகிறது.

மத்திய உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட குழுக்களில் இந்திய இளைஞர்கள் சிக்கிக்கொள்வதை தடுக்கும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன

காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான வியூகம்:

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி கூறும்போது, "பயங்கரவாதத்தைப் பரப்ப எந்த மத சித்தாந்தத்தை பயன்படுத்தினாலும் அவை தவறானவைதான். பல்வேறு விதமான ஈர்ப்பினைக் காட்டி பயங்கரவாத இயக்கங்களுக்கு இளைஞர்கள் இழுக்கப்படுகின்றனர். ஐ.எஸ். போதிக்கும் 'காலிபத்' என்பதும் அத்தகையதுதான்" என்றார்.

சர்வதே அளவில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தவிர்க்கக் கூடிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லைக்குள் ஊடுருவி நுழைவது மிகப் பெரிய சவாலானப் பிரச்சினையாக கருதப்படுகிறது.

இதனைத் தாண்டி உள்நாட்டில் பயங்கரவாதத்துக்கு இளைஞர்கள் எளிதாக ஈர்க்கப்படுவது அடுத்தகட்ட சவாலாக உள்ளது.

ஐ.எஸ். இயக்கத்தின் ஆள்சேர்க்கும் பணியில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் ஈடுவடுவதாக உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து இதற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது. இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்க்க 'ஒருங்கிணைந்த தேச வியூகம்' என்ற நிலைப்பட்டை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இளைஞர்களுக்கு அடிப்படை ஆலோசனை, பயங்கரவாதிகளிடம் இளைஞர்களுக்கு ஏற்படும் ஈர்ப்பைத் தவிர்க்க சமூகத்தில் உள்ள மூத்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், சமூக வலைதளங்களை கண்காணிப்பது மற்றும் அதன் வழியாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கி வருவதாக அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x