Last Updated : 07 Dec, 2016 03:15 PM

 

Published : 07 Dec 2016 03:15 PM
Last Updated : 07 Dec 2016 03:15 PM

ஏடிஎம்களில் பணம் எங்கே?- நோட்டு பிரச்சினையில் தொடர்கிறது நாடாளுமன்ற முடக்கம்

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து, மீண்டும் மக்களவை, மாநிலகளவையில் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற முடக்கம் மீண்டும் தொடங்கியது.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ரூபாய் நோட்டு அறிவிப்பைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கூச்சல் எழுப்பினர். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் விவாதம் துவங்குவதற்கு முன்னதாக மறைந்த அரசியல் விமர்சகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சோ ராமசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய தினம் பாஜக சார்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மோடி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசின் முக்கியமான முடிவுகளை விவாதிக்க முடியாத வண்ணம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார்.

முன்னதாக ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பையொட்டி வாக்கெடுப்புக்கு வகை செய்யும் விதிகளின் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இதை அரசு ஏற்க முன்வராமல் விவாதம் மட்டும் நடத்தலாம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து 10வது நாளாக மக்களவை, மாநிலகளவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது குறிபிடத்தக்கது.

எங்கே கறுப்புப் பணம்?- குலாம் நபி ஆசாத் கேள்வி:

பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக 84 பேர் பலியாகியுள்ளனர், சிலர் இதில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று சாடிய குலாம் நபி ஆசாத், ”பணத்திற்கு அரசு முன்கூட்டியே ஏற்பாடு செய்யவில்லை. இதற்கு யார் பொறுப்பு? மக்களவையில் இதற்கு பதில் தேவை.

என்னுடைய 2-வது கேள்வி, வருவாய் செயலர் பெரும்பாலான பணம் திரும்ப வந்து விடும் என்றார். அப்படியென்றால் எங்கே கறுப்புப் பணம்? ஏதோ மறைக்கப்படுவது போல் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் மக்களவையில் இது குறித்து தெரிவிக்க வேண்டும்.

ஏன் ஏடிஎம்களில் பணம் இல்லை. வங்கிகளில் போதிய பணம் இருக்கிறது என்று அரசு கூறுகிறது, ஆனால் ஏடிஎம்களில் பணம் இல்லை ஏன்? மக்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்” என்றார் காட்டமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x