Last Updated : 14 Aug, 2015 10:30 AM

 

Published : 14 Aug 2015 10:30 AM
Last Updated : 14 Aug 2015 10:30 AM

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் எந்தப் பணியும் நடக்காமல் முடிந்த கூட்டத்தொடர்

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரங்களால், நாடாளுமன்றம் கடந்த 4 வாரங்களாக முடங்கியது. எந்தப் பணிகளும் நடைபெறாத நிலையில் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. தேதி குறிப்பிடாமல் மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான், லண்டனில் தங்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி திடீரென பரபரப்பு தகவல் வெளியிட்டார். அதில், ‘போர்ச்சுகல்லில் சிகிச்சை பெற்று வரும் எனது மனைவியை பார்க்க அங்கு செல்ல வேண்டி இருந்தது. அதற்காக பிரிட்டன் அரசிடம் இருந்து எனக்கு பயண ஆவணங்கள் கிடைப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவினர் என்று தகவல் வெளியிட்டார்.

இதற்கிடையில், மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர் நியமனங்களில் மாபெரும் மோசடி நடந்ததும், அதில் சம்பந்தப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்ம மரணம் அடைந்ததும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து காங்கிரஸ் மற்றும் எல்லா எதிர்க் கட்சிகளும் சுஷ்மா, வசுந்தரா, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகிய 3 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டன. ஒரு நாள் கூட மக்களவையில் அலுவல் எதுவும் நடைபெறவில்லை. மத்திய அரசும், மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அவையை சுமூகமாக நடத்த முயற்சி மேற்கொண்டனர். எனினும், 3 பேர் ராஜினாமா விஷயத்தில் எதிர்க்கட்சியினர் பிடிவாதமாக இருந்தனர். தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டனர். இதனால் தினந்தோறும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையில், கடும் அமளியில் ஈடுபட்ட 25 காங்கிரஸ் எம்.பி.க்களை 5 நாட்களுக்கு சுமித்ரா மகாஜன் இடைநீக்கம் செய்தார். இது பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரஸுக்கு எல்லா எதிர்க்கட்சியினரும் ஆதரவளித்தனர். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

எனினும், மக்களவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன்னிலை விளக்கம் அளித்தார். அப்போது, ‘‘லலித் மோடிக்கு உதவி செய்யவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருடைய மனைவிக்குதான் உதவி செய்தேன். இது தவறா? தவறு என்றால் நாடாளுமன்றம் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். என் நிலையில் சோனியா காந்தி இருந்திருந்தால், ஒரு பெண்ணை சாக விட்டுவிடுவாரா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சோனியா, ‘‘என்னால் முடிந்த உதவிகளை செய்திருப்பேன். ஆனால், சட்டத்தை மீறியிருக்க மாட்டேன்’’ என்றார்.

இந்த பரபரப்புக்கு இடையிலும் மக்களவையில் கேள்வி நேரம் சில முறை எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகள் இல்லாத நேரங் களில் 10 சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 6 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன.

கடைசியில் நேற்றுமுன்தினம் லலித் மோடி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப் பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகப் பேசினார். அப்போது ஆளும் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை மக்களவை கூடியதும், சுஷ்மா, வசுந்தரா, சவுகான் மீதான புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மக்களவையை தேதி குறிப்பிடாமல் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘மழைக்கால கூட்டத்தொடரின் போது 25 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எத்தனையோ வழிகளில் முயன்றும் அமளி நிற்காததால் கடைசியாகத்தான் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உறுப்பினர்களின் குறுக்கீடு களால் அவையின் பெரும் பாலான நேரம் வீணானது. வருங் காலங்களில் அவையில் பணிகள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

9 மணி நேரம் மட்டுமே செயல்பட்ட மாநிலங்களவை

சுஷ்மா, வசுந்தரா, சவுகான் விவகாரங்களால் மாநிலங்களவை முற்றிலும் முடங்கியது. மொத்தம் 9 மணி நேரம் மட்டுமே அவையில் பணி நடந்தது. 82 மணி நேரம் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் வீணானது. மக்களவை மொத்தம் 47 மணி நேரம் 27 நிமிடங்கள் நடந்தது. இதில் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் 34 மணி நேரம் 4 நிமிடங்கள் வீணாக கழிந்தன.

மீண்டும் கூட்ட அரசு முடிவு?- அமைச்சரவைக் குழு பரிந்துரை

மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தொடர் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்காக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட அவைகளை மீண்டும் கூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 3 வாரங்களும் வீணாகப் போனது.

எனவே, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பிருக்குமானால், மீண்டும் கூட்டத்தைக் கூட்டலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. நேற்று, தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, குறுகிய கால அவகாசத்தில் மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 85 (2)ன்படி குடியரசுத் தலைவர் இரு அவைகளிலும் கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடுவார். ஆனால், இரு அவைகளும் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடாவிட்டோலோ, பேரவைத் தலைவரால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டாலோ, அதே கூட்டத்தொடர் எந்த நேரத்திலும் மீண்டும் கூட்டப் படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x