Last Updated : 18 Jan, 2017 08:27 AM

 

Published : 18 Jan 2017 08:27 AM
Last Updated : 18 Jan 2017 08:27 AM

உ.பி.யில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

உத்தரப் பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன் மூலம் உ.பி.யின் 15 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி, மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக உ.பி.யின் மேற்கு பகுதியில் 15 மாவட்டங்களுக்கு உட்பட்ட 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.

இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. வரும் 24-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற 27 கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தலில், 1.17 கோடி பெண்கள் உட்பட 2.57 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 24.25 லட்சம் வாக்காளர்கள் 18-19 வயதுடையவர்கள். முதல்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும்.

குறிப்பாக கலவர அபாயம் உள்ள முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்கள் இதில் அடங்கும். இதர மாவட்டங்களான பாக்பத், மீரட், காசியாபாத், கவுதம் புத்தா நகர், ஹபூர், புலந்த்ஷாஹர், அலிகர், மதுரா, ஹத்ராஸ், ஆக்ரா, பிரோசாபாத், இடா, காஸ்கஞ்ச் ஆகியவையும் முதல் கட்டத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கு தயாராகி வருகின்றன.

மொத்தமுள்ள 403 தொகுதி களில் முஸ்லிம்களுக்கு 97 இடங்களை ஒதுக்கிய பகுஜன்சமாஜ் கட்சிக்கு முதல்கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தலித் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பெரிதும் நம்பியுள்ளார்.

பாஜகவுக்கு எதிரான முஸ்லிம் வாக்குகளை மாயாவதி எந்தள வுக்கு தன் பக்கம் இழுப்பார் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். உட்கட்சிப் பூசலால் பிளவுபட்டு, தற்போது அகிலேஷ் தலைமை யில் இயங்கும் சமாஜ்வாதி கட்சிக் கும் முதல்கட்டத் தேர்தல் முக்கிய பலப்பரீட்சையாக அமையும்.

இதற்கிடையே உத்தராகண்ட் மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலையை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மற்றும் ஆணையர்கள் இன்று டேராடூன் செல்கின்றனர்.

2 நாட்கள் டேராடூனில் தங்கும் ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். உத்தராகண்ட்டில் பிப்ரவரி 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

மெகா கூட்டணி

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங் கியதால் மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் அகிலேஷ் தீவிரமாக ஈடுபட்டுள் ளார். அதே நேரம் தந்தை உட்பட கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செயல்படுவேன் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் நேற்று கூறும்போது, “உ.பி.யில் மீண்டும் சமாஜ்வாதி தலைமையில் ஆட்சி அமைவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக, எனது தந்தை முலாயம் சிங் மற்றும் அனைத்து மூத்த தலைவர்களையும் அரவணைத்து செயல்படுவேன். மதவாத சக்தி களை ஒடுக்குவதற்காக காங்கிர ஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஓரிரு நாளில் கூட்டணி பற்றிய முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.

ராம்கோபால் யாதவ் கூறும் போது, “கூட்டணி பற்றி அகிலேஷ் முடிவு செய்வார். சமாஜ்வாதி தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமையும் என்று நம்புகி றேன்” என்றார். இதை உறுதிப் படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் உ.பி. ொறுப்பாளரும் அக்கட்சியின் பொதுச் செயலாள ருமான குலாம் நபி ஆசாத் டெல்லி யில் நேற்று கூறும்போது, “உ.பி. தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து சமாஜ்வாதி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும். இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

மொத்தம் உள்ள 403 தொகுதி களில் காங்கிரஸுக்கு 90 முதல் 100 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக குலாம் நபி ஆசாத்தும் ராம் கோபால் யாதவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் அஜித் சிங் தலைமை யிலான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இக்கட்சிக்கு மாநிலத்தின் மேற்கு பகுதியில் செல்வாக்கு இருப்பதால் கணிசமான தொகுதி ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஷீலா தீட்சித் கூறும்போது, “சமாஜ்வாதி-காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தால் முதல்வர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகி, அகிலேஷுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x