Published : 31 Jan 2017 07:20 PM
Last Updated : 31 Jan 2017 07:20 PM

உ.பி.தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கணிப்பு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்துடன் ஆளும் சமாஜ்வாதியும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை போல, இந்த முறையும் வெற்றி பெறலாம் என்ற திட்டத்துடன் பாஜகவும் களம் இறங்கியுள்ளன. குறிப்பாக முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து பகுஜன்சமாஜ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச தேர்தல் களம் குறித்து டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் இணைந்து அண்மையில் கருத்து கணிப்பு நடத்தின. அதில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 202 இடங்களில் வெற்றிப் பெற்று (34 சதவீதம்) தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸுடன் கைகோர்த்து களம் இறங்கியுள்ள ஆளும் சமாஜ்வாதிக்கு இந்த முறை 147 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டும் என்றும். இந்த கூட்டணிக்கு 31 சதவீத அளவுக்கே வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இதேபோல் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி 24 சதவீத வாக்குகள் பெற்று வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அந்தக் கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளத்துக்கு 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளர் குறித்து நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக் கணிப்பில் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவுக்கு தான் வாக்காளர்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மொத்தம் 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வரான மாயாவதி 23 சதவீதத்துடன் 2-ம் இடமும் 16 சதவீத ஆதரவுடன் பாஜகவின் யோகி ஆதித்யநாத் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் மத்தியில் அதிக ஆதரவு காணப்படுகிறது. மொத்தம் 63.4 சதவீதம் பேர் இந்நடவடிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x