Published : 26 Jan 2015 12:25 PM
Last Updated : 26 Jan 2015 12:25 PM

இந்தியாவில் ஒபாமா: கவனத்தை ஈர்த்த பயணம் - வெள்ளை மாளிகை ‘ஜெய் ஹிந்த்’ வாழ்த்து

வெள்ளை மாளிகை ‘ஜெய் ஹிந்த்’ வாழ்த்து

ஒபாமா டெல்லி வந்திறங்கியவுடன் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை காத்திருந்தபோது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து வெளியானது.

“இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடவும், அமெரிக்க – இந்திய உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கவும் அந்நாடு சென்றுள்ள அதிபர் ஒபாமா கவுரவிக்கப்படவிருக்கிறார். ஜெய் ஹிந்த்!” என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஒபாமாவுக்கு 21 குண்டுகள் முழுங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட பிறகு, அதே செய்தியில் “ஒபாமா கவுரவிக்கப்பட்டார்” என்று மட்டும் திருத்தம் செய்து மீண்டும் வெளியிட்டது வெள்ளை மாளிகை.

ஹைதராபாத் இல்லத்தில் மதிய விருந்து

ஒபாமாவுக்கு பிரதமர் மோடி நேற்று ஹைதராபாத் இல்லத்தில் நேற்று மதிய விருந்து அளித்தார்.

சைவம் மற்றும் அசைவ உணவுகள் இதில் இடம்பெற்றிருந்தன. ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற உணவு வகைகள் இதில் இருந்தன. சைவ மற்று அசைவ ‘சூப்’புகள், குலாப் ஜாமூன் உள்ளிட்ட இனிப்பு வகைகள் மற்றும் பழங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் தென்னிந்திய காபி மற்றும் மூலிகை டீ-யும் மெனுவில் இடம்பெற்றிருந்தன.

இரவு விருந்தில் சிக்கன் மலாய் டிக்கா

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒபாமாவுக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. சைவம் மற்றும் அசைவ உணவுடன் கூடிய இந்த விருந்து மிகுந்த கவனமுடன் தயாரிக்கப்பட்டிருந்தது.

மட்டன் ரோன் ஜோஷ், கலவ்ட்டி கபாப், சிக்கன் மலாய் டிக்கா, சவுஃபியன்ஸ் ஃபிஷ் டிக்கா, பன்னீர் மலாய் டிக்கா உட்பட பல்வேறு வடஇந்திய மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் இதில் இடம் பெற்றிருந்தன. இந்த விருந்தில் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் வழக்கமாக 100 பேருக்கு மேல் விருந்து அளிப்பதில்லை. இந்நிலையில் நேற்று தரப்பட்ட விருந்தே, இங்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய விருந்தாக கருதப்படுகிறது.

இந்தியா - அமெரிக்கா இடையே ஹாட்லைன்

அதிபர் ஒபாமா - பிரதமர் மோடி ஆகியோர் டெல்லியில் இருந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி பேசுகையில், ‘‘இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் அடிக்கடி பேசுவதற்கு வசதியாக ஹாட்லைன் இணைப்பு ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் புதிய பயணம் தொடரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x