Published : 22 Mar 2014 11:35 AM
Last Updated : 22 Mar 2014 11:35 AM

ஆந்திராவில் கட்சி தாவும் அரசியல்வாதிகள்

ஆந்திர பிரிவினைக்குப் பிறகு தெலங்கானா, சீமாந்திரா பகுதியில் அரசியல் குழப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதிய கட்சிகள் முளைத்து வருவதால் மக்களை திசை திருப்ப மூத்த அரசியல்வாதிகள் கட்சி தாவி வருகின்றனர்.

ஆந்திராவின் சீமாந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் இருதலைக்கொள்ளி எறும்பாய் காங்கிரஸ் அவதிப்பட்டு வருகிறது. சீமாந்திரா பகுதியில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சித் தேர்தல்களில் போட்டியிடகூட காங்கிரஸில் வேட்பாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நகராட்சி, மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவே இல்லை. பல்வேறு ஊராட்சிகளிலும் இதே நிலைதான்.

ஆந்திராவில் தற்போது நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மக்களைக் கவர பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், காங்கிரஸார் மட்டும் மக்களிடையே என்ன கூறி வாக்கு சேகரிப்பது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

இந்த நிலையை முன்கூட்டியே அறிந்த சில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கட்சிகளில் தஞ்சம் அடைந்து விட்டனர். அந்த வரிசையில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் முதல் எம்.பி., எம்.எல்.ஏ க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வரை பலர் கட்சி தாவியுள்ளனர்.

இவர்கள் இப்போது காங்கிரஸை கடுமையாக விமர்சித்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். கட்சி மாறினால் அவர்களை மக்கள் மறந்து விடுவார்களா, அல்லது மன்னித்து விடுவார்களா என்பது உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொடங்கியபோது தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பலர் புதிய கட்சியில் சேர்ந்தனர். இதேபோன்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் பலர் இணைந்தனர். மாநில பிரிவினைக்குப் பிறகு சீமாந்திராவில் காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய காலியாகிவிட்டது. காங்கிரஸை சேர்ந்த பலர் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். இதில் அதிகமானோர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளனர். இதுவரை, 12 காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கு தேச கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.

பா.ஜ.க.விலும் சில மத்திய, மாநில அமைச்சர்கள் இணைந்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தொடங்கிய ஜெய் ஒருங்கிணைந்த ஆந்திரா கட்சியில் 6 அமைச்சர்கள் மற்றும் சில எம்.பி.க்கள் உள்ளனர். புதிதாக யாரும் இந்த கட்சியில் இணையவில்லை.

இதனிடையே நடிகர் பவன் கல்யாண் தொடங்கி உள்ள ஜன சேனா கட்சியில் சேர பலர் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. இவர் தேசிய அளவில் பா.ஜ. க. கூட்டணி அமைத்து மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே முதலில் தெலுங்கு தேசம்- பா.ஜ.க. கூட்டணி முடிவான உடன் இந்த கூட்டணியில் பவன் கல்யாண் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கும் எனத் தெரிகிறது.

ஜன சேனா கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி ஏற்பட்டால் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. வேறுவழியின்றி காங்கிரஸுடன் கம்யூனிஸ்டுகள் கை கோக்க வேண்டும், இல்லையெனில் தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

தெலங்கானாவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி மறுத்துவிட்டது. அந்தக் கட்சி தெலங்கானாவில் தனித்துப் போட்டியிடுகிறது. புதிதாக உருவாகியுள்ள அந்த மாநிலத்தில் ராஷ்டிர சமிதிக்கும், காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரம் சீமாந்திரா பகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

தற்போது நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் மக்கள் நாடித்துடிப்பை அறிய உதவும் வெள்ளோட்டமாகக் கருதப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x