Published : 25 Jun 2019 02:16 PM
Last Updated : 25 Jun 2019 02:16 PM

மேகேதாட்டு அணை: மோடி அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து தமிழகத்தின் காவிரி உரிமைக்கே முடிவுரை எழுதும் சதி; வேல்முருகன் விமர்சனம்

மேகேதாட்டு அணை விவகாரம், மோடி அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து தமிழகத்தின் காவிரி உரிமைக்கே முடிவுரை எழுதும் சதி என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஏற்கெனவே தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய காவிரி உரிமை மாநிலங்களின் ஒப்புதலின்றியே, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தது மத்திய பாஜக மோடி அரசு. அதன்படி, முதற்கட்ட ஆய்வினை நடத்தி அணைக்கான வரைவுத் திட்டத்தையும் தாக்கல் செய்தது கர்நாடக அரசு.

இது, கடைமடைப் பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் புதிய அணை உட்பட எந்தப் பணிகளையும் செய்ய முடியாது என்கின்ற காவிரி நடுவர் மன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மட்டுமின்றி, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம் மற்றும் பன்னாட்டு நதிநீர் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

மேகேதாட்டு அணைக்கான மத்திய அரசின் சட்டவிரோத அனுமதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. அதையடுத்து, அணைக்கான அனுமதியைத் திரும்பப் பெறக் கோரி, 2018 நவம்பரில் பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது தமிழக அரசு.

ஆனால், அந்த வழக்கு விசாரணையில் இருந்துவரும் நிலையிலேயே, இப்போது, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியையும் கோரி மோடி அரசிடம் விண்ணப்பித்துள்ளது கர்நாடக அரசு.

இதற்குக் காரணமாக, கர்நாடகாவின் வறட்சியைச் சமாளிக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கவும் இந்த அணை அவசியம் என விண்ணப்பத்தில் கூறியுள்ளது.

ஆனால் உண்மையில், "தமிழகத்திற்கு சொட்டுத் தண்ணீர்கூட விட முடியாது; மேகேதாட்டில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது'' என்றுதான் கூறி வருகிறது கர்நாடகம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காவிரி பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவரைப் பேசவிடாமல் கூச்சல் போட்டார்கள் கர்நாடக பாஜக எம்.பி.க்கள். இப்படிப்பட்ட கர்நாடகம்தான் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்க அணை தேவை என்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஆணையம் அமைத்து, தமிழகத்துக்கு காவிரியை மறுத்த கூட்டு சதியாளர்கள்தான் இந்த கர்நாடக மற்றும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள்.

"400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதத்தில் அமைக்கப்படும் இந்த அணை 9 ஆயிரம் கோடி செலவில் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்; இதற்காக 5,252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும்; அதில் 4,996 ஹெக்டேர் நிலம் நீருக்குள் மூழ்கும்; இதில் 3,181 ஹெக்டேர் நிலம் காவிரி வன உயிர் சரணாலயத்திற்கு உட்பட்டது; 1,869 ஹெக்டேர் நிலம் காப்புக் காடுகள்; இந்தத் திட்டத்தில் நீரில் மூழ்கும் 5 கிராம மக்களுக்கு மாற்று வாழ்விடம் அளிக்கப்படும்" என்கிறது கர்நாடகம்.

ஆனால் தமிழகம், சனாதனம் என்ற புள்ளியில் ஒன்றிணையும் மோடி அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து தமிழகத்தின் காவிரி உரிமைக்கே முடிவுரை எழுதும் சதியைப் புரிந்துகொள்ளாமல் இல்லை.

மேகேதாட்டு அணைக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியைக் கோருகிறது கர்நாடகம் என்றால் அது யார் கொடுத்த தைரியம்?

ஏற்கெனவே மோடி அரசு, அணைக்கான வரைவுத் திட்டத்தை கர்நாடகத்திடம் கேட்டு வாங்கிப் பெற்றுக்கொண்டதுதான் இதற்குக் காரணம்!
இயற்கைச் சட்டம், இந்தியச் சட்டம், ஏன் சர்வதேச சட்டத்தையும் மீறி, தமிழகத்தின் காவிரி உரிமையைக் காவுகொள்கிறது சனாதனம்!
சனாதனத்தையும் அதன் சதியையும் வேரறுக்காமல் விடமாட்டோம் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி", என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x