Published : 15 Dec 2018 04:06 PM
Last Updated : 15 Dec 2018 04:06 PM

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்; முதல்வர் பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.

இதுகுறித்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்த நிலையில், நீதிபதி தருண் அகர்வால் குழு ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை அளித்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், தொடர்ந்து அதனை இயக்க அனுமதிக்கலாம் என தருண் அகர்வால் குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் 3 ஆண்டுகளில் ரூ.100 கோடி செலவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை ஸ்டெர்லைட் ஆலைக்கும் பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து அந்த ஆலையின் உரிமையாளர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x