Last Updated : 14 Dec, 2018 10:49 AM

 

Published : 14 Dec 2018 10:49 AM
Last Updated : 14 Dec 2018 10:49 AM

டிஜிட்டல் மேடை: வெள்ள ராஜாவுக்கு நல்வரவு!

அமேசான் பிரைமில் முதல் தமிழ் இணையத் தொடராகக் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது ‘வெள்ள ராஜா’. பாபிசிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்தொடரை குகன் சென்னியப்பன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான வெள்ள ராஜாவை அமேசான் தனது எக்ஸ்க்ளூசிவ் வரிசையில் தெலுங்கு மற்றும் இந்தியில் ‘டப்’ செய்தும் வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான ‘நார்கோஸ்’ தொடங்கி இந்தியாவில் பிரபலமான ‘சேக்ரட் கேம்ஸ்’ வரையிலான இணையத் தொடர்களின் ஆதர்ஷமான போதைப் பொருள் கடத்தலே ‘வெள்ள ராஜா’விலும் தொடர்கிறது. ‘ஜிகர்தண்டா’வில் தேசிய விருது வாங்கித் தந்த ‘அசால்ட் சேது’வை அசப்பில் நினைவுபடுத்தினாலும் தனது தனித்துவ நடிப்பில் ‘வெள்ள ராஜா’ தேவா கதாபாத்திரத்தை பாபிசிம்ஹா வித்தியாசப்படுத்தியிருக்கிறார். போதை மருந்துப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக, சென்னை மாநகரின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயலும் காவல்துறை அதிகாரியாக வருகிறார் பார்வதி நாயர். அவர் அறிமுகமாகும்போது உருவாகும் எதிர்பார்ப்புகள் பின்னர் பொய்த்துப்போகின்றன .

வெள்ள ராஜாவின் தொழில் கேந்திரம் மற்றும் வசிப்பிடமாக இருக்கிறது வடசென்னையின் பாவா லாட்ஜ். தொலைக்காட்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக அக்காள் குழந்தைகளுடன் வரும் பள்ளி ஆசிரியர் காளி வெங்கட், உயிர் தாக்குதலில் தப்பிப் பிழைக்கும் சமூகப் போராளியான காயத்ரி, கோடிஸ்வர ஆசையில் சென்னை வரும் கோவில்பட்டி கிராமத்தான்கள், சபலிஸ்டான மத்திம வயது ஆண் ஆகிய கதாபாத்திரங்களுடன் இந்தியில் சதாய்க்கும் ஏழடி உயர கிடாரிஸ்ட், வாய் திறக்காத அகோரி சாமியார் எனப் பல நபர்கள் விடுதி அறைகளில் அன்றைய தினம் வந்து தங்குகிறார்கள். இவர்களில் சிலரது பின்னணியைச் சொல்வதற்கே சரிபாதி எபிசோடுகள் அலைபாய்ந்தாலும் அவை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவே செய்கின்றன.

தாதா தேவா தனது லாட்ஜை விட்டு வெளியேறினால் அவனைப் போட்டுத்தள்ள போலீஸ் ஒரு பக்கமும் தொழில் போட்டியாளர்கள் மறுபக்கமும் ஸ்கெட்ச் போட்டுக் காத்திருக்கிறார்கள். வழக்கமாக ஈயாடும் லாட்ஜ் அறைகள் அன்றைய தினம் நிரம்பி வழியவே, அறைவாசிகள் அனைவரையும் தேவா சந்தேகிக்கிறான். கூடவே தன்னுடைய சகாக்களில் ஒரு துரோகி ஒளிந்திருப்பதையும் ஊகிக்கிறான். போட்டி தாதாவைக் கூட்டு சேர்த்துக்கொள்ளும் போலீஸ், தேவாவின் லாட்ஜுக்குள் அதிரடியாக நுழைகிறது. அதற்கு முன்னும் பின்னுமாக லாட்ஜுக்குள் நடக்கும் த்ரில்லர் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைப் பின்பாதி எபிசோடுகள் தருகின்றன.

அத்தியாயம் தோறும் துண்டு துண்டாக விரியும் பாபிசிம்ஹாவின் பிளாஷ்பேக் காட்சிகள் அசத்தல். அண்டிப் பிழைக்கும் அடியாள் மிரட்டலான தாதாவாக மாறும் சூழலின் அழுத்தத்தை, நிழல் உலகத்துக்கே உரிய மசாலாக்கள் கலந்து தருகிறார்கள். அதற்கு நியாயம் சேர்க்கும் நப்பாசையில் அநியாயத்துக்குக் கெட்ட வார்த்தைகளும் ரத்தம் தெறிக்கும் வன்முறைகளும் வருகின்றன. பாபிசிம்ஹாவின் பிளாஷ்பேக் காட்சிகள் தந்த பிரமிப்பை, லாட்ஜ் அறைவாசிகளுடன் அவர் செலவிடும் தொடக்கக் காட்சிகள் தரவில்லை.

இயற்கைப் பேரிடரில் இடிந்து போகும் பள்ளிக் கட்டிடத்திற்காக ஆசிரியர் காளிவெங்கட் தவிப்பது, தற்போதைய புயல் சோகத்தை நினைவூட்டுகிறது. காப்பர் தொழிற்சாலையால் அப்பாவிப் பொதுமக்கள் கேன்சருக்குப் பலியா வது தூத்துக்குடிப் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால், நீட்டி முழக்கி சித்தரிக்கப்படும் காளிவெங்கட், காயத்ரி கதாபாத்திரங்களும் அவர்களுக்கான கதையோட்டமும் அதற்கான தேவையைப் பூர்த்தி செய்யாது அந்தரத்தில் விடப்படுகின்றன.

திரைப்படங்களுக்குச் சவால்விடும் கலை உழைப்பை பாவா லாட்ஜ் உருவாக்கத்தில் செலவிட்டிருக்கிறார்கள். லாட்ஜ் மட்டுமன்றி அத்தியாயத் தொடக்கத்திலும் பாபிசிம்ஹாவுடனுடம் பயணிக்கும் இசைத் தெறிப்புகள் ஆரண்ய காண்டத்தை நினைவூட்டுகின்றன. வசனங்கள் பல இடங்களில் ‘அட’ போட வைத்தாலும் பச்சையான வசவுகள் நெளிய வைக்கின்றன. இவற்றுடன் வன்முறைக் காட்சிகளில் கொடூரத்தைக் குறைத்திருந்தால் ஸ்மார்ட் டிவியில் குடும்பத்துடன் ரசிக்கும்படியான த்ரில்லர் கிடைத்திருக்கும்.

எச்சரிக்கை: குழந்தைகள் பள்ளி சென்றிருக்கும் நேரத்தில் காணுங்கள்.திரைப்படங்களுக்குச் சவால்விடும் கலை உழைப்பை பாவா லாட்ஜ் உருவாக்கத்தில் செலவிட்டிருக்கிறார்கள். லாட்ஜ் மட்டுமன்றி அத்தியாயத் தொடக்கத்திலும் பாபிசிம்ஹாவுடனும் பயணிக்கும் இசை தெறிப்புகள் ஆரண்ய காண்டத்தை நினைவூட்டுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x