Published : 16 Aug 2018 04:58 PM
Last Updated : 16 Aug 2018 04:58 PM

ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங்

ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பும் ஆல் ரவுண்டரின் கடமையாகும்.

பந்துவீச்சு அதிகமாகத் தேவைப்படும் நேரத்தில் அதில் பங்களிப்பைச் செலுத்துவதும், பேட்டிங் தேவைப்படும் போது, அதில் கவனத்தை திருப்புவதும் ஆல் ரவுண்டருக்கு இருக்க வேண்டிய முக்கியத் திறமைகளில் ஒன்றாகும். இவர்களைத்தான் ஆல் ரவுண்டர் என்று அழைக்க முடியும். ஆனால், ஒரு சில போட்டிகளில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதற்காக ஹர்திக் பாண்டியா கபில்தேவுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்த இரு போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஹர்திக் பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசுவது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த வீரர் ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்:

''ஹர்திக் பாண்டியாவுக்கு பல போட்டிகளில் பேட்டிங்கிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது, பந்துவீச்சிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பேட்டிங்கில் நம்பிக்கை ஏற்படும் வகையில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஒருவேளை பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்க வேண்டும். இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதேநிலையில், ஹர்திக் பாண்டியா செயல்பட்டால், எதிர்காலத்தில் அவர் இந்திய அணியில் நீடித்து இருப்பதே கடினம்தான். தயவுசெய்து லெஜண்ட் கபில்தேவுடன், ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடாதீர்கள்.

ஆல் ரவுண்டர்களாக இருக்கும் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் செயல்படுவதைப் போல் ஹர்திக் பாண்டியா செயல்படுகிறாரா? பின் ஏன் அவர் பின், ஆல் ரவுண்டர் என்ற பட்டத்தைக் கொடுக்கிறீர்கள். அவர் மீது இருக்கும் ஆல் ரவுண்டர் பட்டத்தை எடுத்துவிடுங்கள்.

ஒருநாள் இரவில் கபில்தேவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா, கபில்தேவ் ஆகிவிட முடியாது.''

இவ்வாறு ஹர்பஜன் சிங் காட்டமாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x