Last Updated : 13 Jul, 2019 09:06 AM

 

Published : 13 Jul 2019 09:06 AM
Last Updated : 13 Jul 2019 09:06 AM

நீதிபதிகள் வழக்காடும் விசாரணை

நிரபராதிகளின் காலம்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ்

தமிழில்: ஜி.கிருஷ்ணமூர்த்தி

க்ரியா வெளியீடு

திருவான்மியூர், சென்னை-41.

விலை: ரூ.200

 72999 05950

அனுபவ் சின்ஹாவின் ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அவரது முந்தைய ‘முல்க்’ திரைப்படமும் இப்போது மீண்டும் விவாதமாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் பயத்திலேயே ஒவ்வொரு நிமிடத்தையும் எதிர்கொள்ளும் பதற்றத்தையும், மிகப் பெரும் அதிகாரிகளிலிருந்து சாமானியர்கள் வரை அவர்களை முன்தீர்மானத்தோடு அணுகும் இயல்பையும் சித்தரித்த விதம் நமக்குள் ஒரு குற்றவுணர்வை உண்டாக்குகிறது. நமக்குள் ஒளிந்திருக்கும் இந்த இயல்பை நமக்குக் காட்டிவிடுவதால் வரும் குற்றவுணர்வு அது; எல்லாவற்றிலும் ஏதோ ஒருவகையில் நமக்கும் பங்கிருப்பதால் வரும் குற்றவுணர்வு. ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’ நாடகமும் ஒருவகையில், சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், வன்முறைகள், அநீதிகளைத் தமக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாததாக நினைத்து இயல்பாகக் கடந்துசெல்லும் சாமானியர்களைப் பற்றியதுதான்.

நிரபராதிகளின் காலம் - நாடகத்தின் முதல் வரி இந்தத் தலைப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ‘சமூகத்துக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; அதனால், தனிப்பட்ட எனது தலையீடு இல்லாத எதற்கும் நான் பொறுப்பில்லை’ என்றபடி உலவும் நிரபராதிகளால் இவ்வுலகம் நிரம்பியிருக்கிறது என்கிற தொனியில் இந்தத் தலைப்பு ஒலிக்கிறது.

இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாடகத்தில் இரண்டு விசாரணைகள் நடைபெறுகின்றன. கொள்கைப் பிடிப்புள்ள லாஸோன் ஒரு சர்வாதிகாரியைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிடுகிறான். பிடிபட்ட புரட்சிக்காரனின் கூட்டாளிகளை அவன் மூலமாகப் பிடித்துவிட வேண்டுமென எவ்வளவு சித்ரவதை செய்தும் அவன் மசிவதாக இல்லை. இந்நிலையில் ஹோட்டல் முதலாளி, வங்கி அதிகாரி, விவசாயி, லாரி ஓட்டி, டாக்டர், மாணவன் என்று தங்களை இந்தக் குற்றத்துக்குத் தொடர்பில்லாதவர்களாக நினைத்துக்கொள்ளும்  ஒன்பது பேரை லாஸோனுடன் ஒரு சிறையில் அடைத்துவைக்கிறார்கள். லாஸோனிடமிருந்து அவனது கூட்டாளிகளின் பெயர்களை வாங்கும் வரை யாராலும் அங்கிருந்து வெளியேற முடியாது. அதுவரை யாருக்கும் குடிக்கத் தண்ணீர்கூடக் கிடையாது. சிறையின் கம்பியைத் தொட முயன்றாலே சவுக்கடிதான். இந்த நெருக்கடிக்குள், ஒன்பது பேரும் அவனிடம் விசாரணையைத் தொடங்குகிறார்கள்.

லாஸோனின் பரிதாபமான நிலையைக் கண்டு சிலர் வருந்துகிறார்கள். அவனிடம் அன்பான வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். லாஸோனோ பெயர்களைச் சொல்ல மறுக்கிறான். அவனது உறுதியான கொள்கைப் பிடிப்பு சிலருக்கு எரிச்சலூட்டுகிறது. வசைபாடத் தொடங்குகிறார்கள். விவாதம் வலுத்து அவனைத் தாக்கவும் செய்கிறார்கள். என்ன செய்தாலும் அவன் பெயர்களைச் சொல்ல மறுக்கிறான். ‘உன் ஒருவனுக்காக நாங்கள் ஒன்பது பேரும் அவதிப்பட வேண்டுமா? நீ ஏன் எங்களுக்காகத் தியாகம் செய்யக் கூடாது’ என்று வாதிடுகிறார்கள். ‘அப்படியொரு வாதத்தை நீங்கள் முன்வைத்தால், வெளியே இத்தனை கோடி பேர் இருக்கிறார்களே. அவர்களின் நல்வாழ்வுக்காகப் போராடும் என் நண்பர்களுக்காக நீங்கள் ஒன்பது பேரும் ஏன் தியாகம் செய்யக் கூடாது?’ என்று பதில் கேள்வி கேட்கிறான்.

நாம் எதிர்பார்த்தபடியே இந்த விசாரணை கொலையில் முடிகிறது. ஆனால், லாஸோனைக் கொன்றவர் யார் என்பது தெரியவில்லை. ஒன்பது பேரும் பாராட்டுகளோடு வீடுதிரும்புகிறார்கள். இப்படியொரு வேலை ஒன்பது பேருக்கும் கொடுக்கப்பட்டவுடன் யாரும் அதிகாரத்தை எதிர்த்து, ‘நாங்கள் ஏன் இவனிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கேள்வி கேட்கவில்லை. யாரும் நம்மால் கேள்வி கேட்க முடியவில்லையே என்று நினைத்துகூடப் பார்க்கவில்லை. உடனடியாக எல்லோரும் லாஸோன் பக்கம் நகர்ந்துவிடுகிறார்கள். எப்படியாவது அவனிடமிருந்து பெயர்களை வாங்கிவிடத் துடிக்கிறார்கள்.

விடுவிக்கப்பட்ட ஒன்பது பேரும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூட்டப்படுகிறார்கள். சர்வாதிகார ஆட்சி கவிழ்ந்து புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இம்முறை அவர்கள் சௌகரியமான அறையில் இருத்தப்படுகிறார்கள். லாஸோனைக் கொன்றது யார் என்பது தெரியும் வரை யாரும் அங்கிருந்து நகர முடியாது. முற்றிலும் புதிய பரிமாணத்தில் இன்னும் கூடுதல் கணத்தோடு தொடங்குகிறது இரண்டாவது விசாரணை!

‘நிரபராதிகளின் காலம்’ நாடகம் வெளியான காலகட்டத்தில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெர்மனி என்ற பின்புலத்தில் இந்நாடகம் அணுகப்படும்போது அதற்கு வேறொரு நிறம் கிடைக்கிறது என்றாலும் களம், காலம் எதுவும் இல்லாததும், பெயர்களற்ற கதாபாத்திரங்களும் ஒரு உலகளாவிய தன்மையை இதற்குத் தந்துவிடுகின்றன. எங்கெல்லாம் சர்வாதிகாரத்தை மக்கள் உணர்கிறார்களோ, எங்கெல்லாம் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் பேச வேண்டும் என்ற பிரக்ஞையற்று மக்கள் இருக்கிறார்களோ, குற்றம் நடப்பதில் தனக்குத் தொடர்பில்லை என்று எங்கெல்லாம் வெறுமனே வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் நடைபெறும் இந்நாடக வாசிப்பு ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

இவ்வளவு நாளும் ‘தான் ஒரு நிரபராதி’ என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களையெல்லாம் இந்நாடகம் கேள்விக்குள்ளாக்குகிறது. நிரபராதி என்று அகராதிகள் சொல்லும் அர்த்தங்களையெல்லாம் அழித்துவிட்டு அதற்குப் புதிய விளக்கம் தருகிறது. இந்த நாடகத்தை வாசிக்கும் ஒவ்வொரு நிரபராதியையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு, ‘ஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று மனதால் விரும்பி, அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா, இல்லையா?’ என்று மிக நிதானமாகக் கேட்கிறது.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x