Published : 23 Feb 2019 10:05 AM
Last Updated : 23 Feb 2019 10:05 AM

நூல் வெளி: உறவுகளின் இடைவெளியைப் பாடும் கவிதைகள்

‘கவிதை சற்றே வித்தியாசமான ஒரு விளையாட்டு. மொழி வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விளையாட்டு’ என்கிறார் க.பூரணச்சந்திரன். இன்றைய நவீனக் கவிதைகளில் பெரும்பாலானவற்றில் இந்த விளையாட்டு ஒருசார்புத் தன்மையுடையதாக இருக்கிறது. கவிஞன் தனக்கென்று சில விதிகளை உருவாக்கிக்கொண்டு, அவன் மட்டுமே ஆடுவதுபோன்ற மனநிலை கவிதைகளில் வெளிப்படுகிறது. வாசகனைக் குறைந்தபட்சம் பார்வையாளனாகக்கூட கவிஞர்களின் ஆட்ட விதிகள் அனுமதிப்பதில்லை. கல்யாணராமன் எழுதியுள்ள ‘ஆரஞ்சாயணம்’ கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள், வாசகனையும் ஆட்டத்துக்கு அழைக்கின்றன.

இந்தக் கவிதைத் தொகுப்பை இரண்டு தன்மைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, மனதின் ஆழங்களில் படிமங்களாகத் தேங்கியுள்ள பதின்பருவ நினைவுகளை மீட்டுக்கொணர்ந்து பொதுவில் குவித்துவிட்டுத் தன்னை இளைப்பாற்றிக்கொள்ளும் தன்மையுடைய கவிதைகள். ஒவ்வொரு கவிதையின் முடிவுக்குப் பின்னும் ஓர் ஆசுவாசம் வெளிப்படுகிறது. அந்தப் படிமங்களை வாசிப்பவருடையதாக மாற்றிக்கொள்ளும் நுழைவாயில்களைக் கவிதைகள் கொண்டிருப்பதுதான் சிறப்பு. இத்தன்மையான கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை அளவுக்கான உள்ளீடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. “பேச்சுமொழிக்கு இணக்கமான கூறுமுறை கல்யாணராமனுடையது. அநேகமாக எல்லாக் கவிதைகளும் திறந்த குரலில் சொல்லப்பட்டிருப்பவை. தன் அந்தரங்கத்துக்குச் சொல்லும் ரகசியத்தைக்கூடத் தன்னிடமிருந்து விலக்கி முன்னிலையில் நிறுத்தியே சொல்கிறார். வேடிக்கை பார்ப்பவர்கள் காணாமல்போகவும் கேள்வி கேட்பவர்களைப் பிழைத்திருக்கவும் செய்பவை இந்தக் கவிதைகள்” என்கிறார் சுகுமாரன்.

இரண்டாவதாக மகாபாரதம், சிலப்பதிகாரம், குண்டலகேசி, கம்பராமாயணம், நளவெண்பா போன்ற செவ்விலக்கியக் கதாபாத்திரங்களின் மனநிலைகளை நவீனத் தன்மையுடையதாக மாற்றுகிறார் கல்யாணராமன். இவ்விலக்கியங்களில் கூர்மைப்படாத பகுதிகளை இவரது கவிதைகள் வட்டமிட்டுக் காட்டுகின்றன. ‘உருட்டப்படும் பகடையில்/ தர்மனின்/ மனலயம்/ உருள்கிறது/ உருட்டப்படாத பகடையில்/ சகுனியின்/ ஜீவசக்தி/ குவிகிறது’ என்ற கவிதை மகாபாரதச் சூதாட்டத்தில் தருமனுக்கு அருகில் நின்று படபடப்புடன் பார்க்கும் மனநிலைக்கு அழைத்துச்செல்கிறது. மரபிலக்கியங்கள் மீது கவிஞர் நிகழ்த்தும் உரையாடல் செறிவான கவிதைகளாகியிருக்கின்றன.

அவ்விலக்கியங்களை நவீன வாசிப்புக்கு உட்படுத்தும்போது கிடைக்கும் இடம் மிக விரிவானது. ‘ராமன் சீதை உறவு/ பட்டாபிஷேகத்திற்குப் பிறகு/ நெருஞ்சிமுள்மேல்/ நிற்பதாயிற்று/ ராவணன் வென்றுவிட்டான்’ என்று ராமன்-சீதை உறவுகளுக்கிடையிலான இடைவெளியைச் சொற்கத்திகளாக்கியிருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் மகத்தான ஆளுமை பாரதி. அவரது வறுமையடைந்த வாழ்க்கையை நினைக்கும்போது குற்றவுணர்வும் அவனை நிலைகுலையச் செய்த பார்த்தசாரதி கோயில் யானையின் மீது கோபமும் ஏற்படுவதுதான் இயல்பு. கல்யாணராமன் அந்த யானைக்கு நன்றி சொல்கிறார். ‘பார்த்தசாரதி கோயில் யானைக்கு நன்றி’ என்ற கவிதை பாரதியைப் பிழைக்கத் தெரியாதவன் என்கிறது. கவிதையில் இதுவொரு உத்தி. ‘கருணைக்கொலை புரிந்த/ அந்த யானைக்கு/ என் கோடானு கோடி/ நன்றி’ என்று அந்தக் கவிதை முடிகிறது. பாரதியாரின் வரலாற்றை இந்த ஒரே கவிதை சொல்லிவிடுகிறது. எத்தனை முறை இக்கவிதையைப் படித்தாலும் அவன் வாழ்ந்த காலத்தில் அவனை நிராகரித்த சமூகத்தின் மீது கவிதையில் வெளிப்படும் கோபம் கொஞ்சமும் தணியவில்லை.

தொகுப்பின் பல கவிதைகள் சம்பவங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முடிவைத் திருப்பிவிடும் தன்மையில் எழுதப்பட்டுள்ளன. சில கவிதைகளின் முடிவுகள் மீது தத்துவங்கள் அமர்ந்துள்ளன. இத்தன்மையிலான கவிதைகளை எடுத்துரைப்புக் கவிதைகளென முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் பெருமாள் முருகன். ஒரு நிகழ்வு, அந்நிகழ்வின் மீது ஒரு கருத்து உருவாகிறது. அக்கருத்தைச் சொல்ல அந்த வயதில் மொழி அனுமதிக்கவில்லை. மனதில் சேகரமாகிறது. நினைவின் அடுக்குகளைக் கவிஞர் தற்போது உள் நுழைந்து பார்க்கிறார். நவீன வாழ்க்கையின் போதாமைகளையும் உறவுகளுக்குள் விரிந்துகிடக்கும் இடைவெளிகளையும் கவிபாடுகிறார் கல்யாணராமன்!

- சுப்பிரமணி இரமேஷ், தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x