Last Updated : 17 Feb, 2019 07:37 AM

 

Published : 17 Feb 2019 07:37 AM
Last Updated : 17 Feb 2019 07:37 AM

கோபிகிருஷ்ணன்: மனநோய் உலகின் கைவிளக்கு

கோபிகிருஷ்ணனின் புனைகதைகளில் மனப் பிறழ்வு மனிதர்களின் குரல்களும் நடத்தைகளும் பதிவுகளாகியிருப்பது அவருடைய சிறப்பம்சம் எனில், மனப் பிறழ்வு மனிதர்களின் குரல்களை அவர் ஆவணப்படுத்தியிருக்கும் பதிவுகள் புனைவின் மகத்துவம் கொண்ட தனித்துவ அம்சமாகும்.

இத்தன்மையில் அவருடைய ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ ஒரு நாவலுக்கான வீரியமும் வீச்சும் கட்டமைப்பும் கொண்டது. ஓர் அரிய ஆவணம்; அதேசமயம் ஒரு தனித்துவமிக்க படைப்பு. தமிழில் இது ஓர் அபூர்வ வகை ஆவண இலக்கியம். ஓர் உளவியல் மருத்துவ சமூகப் பணியாளராக அவருடைய அனுபவங்களும் பார்வைகளும் இசைபட உருவாகியிருக்கும் ஆவணப் படைப்பு.

மனப் பிறழ்வு பற்றிய வெளிச்சத்தை நமக்களிக்கும் ஒரு கைவிளக்கு இந்நூல்.

காட்சி, நிலை என்ற இரு பிரிவுகளாக இழைந்து இழைந்து பின்னிச்செல்லும் தன்மை கொண்டது இந்த ஆவணப் படைப்பு. ‘நிலை’ என்பதாக 59 மனநோய் மனிதர்களின் குரல்களும் இயல்புகளும் நடத்தைகளும் பதிவுபெற்றுள்ளன.

‘காட்சி’ என்பதாக உளவியல் மருத்துவ சமூகப் பணி மையத்தின் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன. அதாவது, மனநோயாளிகளின் நிலைகளும் உளவியல் சமூகப் பணி மைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அருகருகாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விருவேறு எதிரெதிர் நிலைகளிலிருந்தும் காட்சிகளிலிருந்தும் வெளிப்படும் நிதர்சனங்கள் இவ்விரு உலகங்கள் பற்றிய ஆழ்ந்த புரிதல்களுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன. புனைவுத் தன்மை கொண்ட இப்பகுதிப் பதிவுகளைத் தொடர்ந்து, இரு பிரிவுகளாக கோபிகிருஷ்ணனின் சிந்தனைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை மனநோய் உலகம் பற்றிய பல்வேறு புரிதல்களுக்கு வழிகாட்டுகின்றன.

‘இன்றும் தொடரும் பழமை’ என்ற தலைப்பில் ஆறு பகுதிகளாக, மலையாள மாந்திரீகர்கள், இந்து சாமியார்கள், பூசாரிகள், முஸ்லிம் ஹஸ்ரத்துகள், கிறிஸ்துவப் பாதிரியார்கள் ஆகியோரைப் பேட்டி கண்டு, மனநோய்க்கு அவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சைகளைப் பதிவுசெய்திருக்கிறார். மனநோயாளிகளின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளை இவை வெளிப்படுத்துகின்றன. அதனைத் தொடர்ந்து, ‘சில செய்திகள்.. சில சிந்தனைகள்’ என்ற தலைப்பில் அவருடைய வாசிப்பிலிருந்து அவர் அறியப்பெற்ற எதிர் உளவியல் பற்றிய சில முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறார்.

எதிர் உளவியல் பற்றிய முதல் தமிழ்ப் பதிவு இது. சம்பிரதாய உளவியல் மேற்கொள்ளும் கட்டாய உளவியல் மருத்துவ சிகிச்சை என்பது ஒரு தண்டனையாகவே நிறைவேற்றப்படுகிறது. ஒருவரை மனநோயாளி என்று தீர்மானிக்கும்போது அவரை சமுதாயம் இழிவுபடுத்துகிறது. அவரைத் தாழ்த்துகிறது. அவரது சுதந்திரத்தை நிர்மூலமாக்குகிறது. அவரது கண்ணியத்தைக் குறைக்கிறது போன்ற சிந்தனைகள் வெளிப்படுகின்றன.

இன்றைய உளவியல் துறையில் சம்பிரதாய உளவியல் அணுகுமுறைகளுக்கு எதிராக உருவாகிவரும் சிந்தனைகளையும் கருத்தாக்கங்களையும் சில பார்வைகளாக ‘சைக்கியாட்ரி டுடே’ என்ற பதிவில் கோபி முன்வைக்கிறார். அதை இப்படியான ஒரு குறிப்போடு தொடங்குகிறார்: “இப்போது நாம் பார்க்கப்போகிறவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள்.

புறக்கணிக்கப்பட்டவர்கள். வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்கள்கூட இல்லாதவர்கள். யார் இவர்கள்? மனச் சிக்கல்கள் உள்ள நம் நண்பர்கள்தான். இவர்களைப் புரிந்துகொள்ள, இவர்களுக்காகப் பரிந்துரைக்க, சக மனிதர்களாக மனிதநேயத்துடன் இவர்களைப் பார்க்க முன்வந்தவர்கள் மிகச் சிலரே. இந்தச் சிலரின் கருத்துகளை இங்கே பார்க்கப்போகிறோம். இந்தச் சிந்தனையாளர்கள் சமூக சராசரிகளிலிருந்து வேறுபட்டவர்கள். சூழலின் நிர்ப்பந்தத்திலிருந்து விடுபட்டுச் சூழலை விமர்சித்தவர்கள்.”எதிர் உளவியல் மருத்துவ இயக்கம் என்பது இன்றளவும் நம்மிடையே கவனம் பெறாததாகவும் கட்டமைக்கப்படாததாகவுமே உள்ளது.

சம்பிரதாய உளவியல் அணுகுமுறைகள் குறித்த எதிர்வினையாகப் பல்வேறு சிந்தனையாளர்களின் எண்ணங்களைத் தொகுத்துத் தருகிறார் கோபி. உளவியல் மருத்துவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம், மருத்துவம் என்ற பெயரில் தனிநபர் உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஒடுக்குவதாக உள்ளது என்று கருதும் ஆர்.டி.லெய்ங்க்-கின் பல கருத்துகள் ஒரு புதிய வெளிச்சத்தைத் தருகின்றன. நோயாளிகளின் விருப்பத்துக்கு மாறாக சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவம் உளவியல் மருத்துவம்தான். தேவையானால் நோயாளிகளைச் சிறையில் அடைக்கும் ஒரே மருத்துவமும் உளவியல் மருத்துவம்தான். சம்பிரதாய உளவியல் மருத்துவம், சமூகத்தின் எதிர்பார்ப்பின்படி, சமூகத்திலிருந்து நோயாளிகளைத் தனிமைப்படுத்தி அவர்களை ஒடுக்குகிறது.

கோபி ஒரு பிரபல மனநல மருத்துவ நிபுணரிடம் சில ஆண்டுகள் தனிச் செயலராக நல்ல ஊதியத்துடன் பணியாற்றினார். மன நோயாளிகளின் நோய்க்குறிப்பு வரலாறு எழுதுவது அவருடைய பணியாக இருந்தது. இதுவே ‘உள்ளிருந்து சில குரல்கள்’ ஆவணப் படைப்புக்கான ஆதாரமாகவும் இருந்திருக்கிறது. ஆனால், சம்பிரதாய உளவியலுக்கு எதிரான மாற்று உளவியல், எதிர் உளவியல் பற்றி அவர் கற்றறிந்த பின்னர், சம்பிரதாய உளவியல் அணுகுமுறை மீதான கோபத்தில் அந்தப் பணியிலிருந்து வெளியேறினார்.

பொதுவாகவே, மனித மனநலம் குறித்து அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னால் இயன்ற பிரயாசைகளை எழுத்திலும் செயல்பாட்டிலும் தொடர்ந்து மேற்கொண்டுவந்தவர் கோபி. மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன் மனநல ஆலோசகரான நண்பர் சஃபி மற்றும் சமூகப் பணிகளில் தொண்டுள்ளத்தோடு பணியாற்றும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனுடன் இணைந்து ‘ஆத்மன் ஆலோசனை மையம்’ என்ற அமைப்பை உருவாக்கி மூன்றாண்டுகள் நடத்தினார்.

பொதுமக்கள் மனநோய் பற்றித் தவறான கருத்துகளைக் கொண்டிருப்பதால் மனநோயாளிகள் அச்சத்துடனும் அவநம்பிக்கையுடனும் வெறுப்புடனும் பார்க்கப்படுகிறார்கள். உறவினர்களாலும் நண்பர்களாலும் புறக்கணிக்கப்படும் அவலத்திலிருந்தே அவர்கள் மீதான ஒடுக்குமுறை நிறைவேற்றப்படுகிறது என்பது போன்ற பல சிந்தனைகளைப் பதிவுசெய்கிறார். அவர்களிடம் நாம் கொள்ள வேண்டிய பரிவுக்காக கோபிகிருஷ்ணன் மன்றாடுகிறார்.

நாம் வாழும் சமூகம் நம் மீது அம்பாரமாய்க் குவித்திருக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் நியதிகளும் நெறிமுறைகளுமே மன இறுக்கம், சிடுக்கு, பிறழ்வு என விதவிதமான மனநோய்க் கூறுகளை உருவாக்குகின்றன. வெவ்வேறு வகையான மனநோய்க்கு ஆட்பட்டவர்களின் விசித்திரமான நடத்தைகளை கோபி பதிவுசெய்வதாகட்டும் புனைவதாகட்டும் நாமறியாத ஒரு மொழி வெளிப்பாடாகவே உள்ளது. சமூக நியதிகளை மீறும் ஓர் அபூர்வ மொழி. ஓர் அதீத ஆரோக்கிய நிலையின் மொழி எனவும் இதைக் கொள்ளலாம்.

வித்தியாசமான நடத்தை என்பது மனநோய் அல்ல. அது ஒரு மொழி என்ற ஞானத்தை நாம் அறிகிறோம். கோபியின் படைப்பு மனமும் மெய்யான கரிசனமும் அவருடைய எழுத்துலகை மனித இயல்புகளும் நடத்தைகளும் பற்றிய ஓர் அரிய ஆவணமாக நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. இது மனித வாழ்வுக்கு மிகவும் பெறுமதியான ஒரு புதிர்மொழியின் ஞானத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x