Published : 10 Feb 2019 08:48 AM
Last Updated : 10 Feb 2019 08:48 AM

ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ

பிச்சை பிச்சை என்று கத்து

பசி இன்றோடு முடிவதில்லை

உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை

எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்

உன் பசிக்கான உணவு

சில அரிசி மணிகளில் இல்லை

உன்னிடம் ஒன்றுமேயில்லை

சில சதுரச் செங்கற்கள் தவிர

உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை

உன்னைத் தவிர

இதனைச் சொல்வது

நான் இல்லை நீதான்.

- ஆத்மாநாம்

ஆத்மாநாம் எழுதிய ‘பிச்சை’ எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல், தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து, கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.

பிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’ என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம் பெறுகிறது. ‘நீ பிச்சைக்காரனாத்தான் போவ’ என்று தந்தைகள் மகன்களைச் சாபம்விட்ட தலைமுறையைச் சேர்ந்தவர் ஆத்மாநாம். அந்தக் குரல் ஆத்மாநாமையும் துரத்தியிருக்கக் கூடும். ஆனால், அந்த ஏவலை அதே உச்சத்தில் பிடித்துத் திருப்பி மரபின் கண்ணாடியில் பிச்சையைக் காட்டுகிறார்.

பசி இன்றோடு முடியாததென்பதால் கூக்குரலும் சன்னமாகவே இருப்பதால் பிச்சை என்னும் குரல் பெருவெளியைக் கடக்கணும் என்கிறார். குடும்பம், வீடு, தெரு, உலகத்தைக் கடக்கும்போது பிச்சை, பிச்சை என்னும் கோரிக்கை எதற்காம்? சில அரிசி மணிகளுக்காக இல்லை; ஒன்றுமேயில்லாத சில செங்கற்களுக்காக இல்லை; பிச்சையின் சத்தம் பெருவெடிப்பாகும்போது பிச்சையிடுவதற்கு - பிச்சைக் கேட்பவனைத் தவிர  யாரும் இல்லை என்று தெரிகிறது. பிச்சையிடவே இன்னொருவர் இல்லாதபோது, பிச்சை பிச்சை என்று கேள் என்று சொல்வது யாராக இருக்கக் கூடும். விமோசனம் வெளியே, வேறெங்கும் இல்லை என்று ஆத்மாநாமின் கைவிரல் நீட்டுகிறது நம் மீது.

புதுக்கவிதை எதைச் சாதித்தது என்று ஒருவர் கேட்டால் ஒரு பணக்கட்டைத் தூக்கிப் போடுவதுபோல இந்தக் கவிதையைத் தூக்கிப் போடலாம். நாடகம் இந்தக் கவிதையில் இருக்கிறது வாசகர்களே. பிச்சை பிச்சை பிச்சை என்று நாடகத்தை அதிகரித்தபடியே போகும்போதுதான் பிச்சையிடுவதற்கு யாரும் இல்லை என்பது தெரியவரும். பிச்சைக்கு இருந்த பழைய அர்த்தமும் கவிதையின் வேகத்தில் புதியதாகிவிடுகிறது.

 அதுவரை பிச்சை பிச்சை என்று கத்து.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x