Last Updated : 10 Jan, 2019 08:46 AM

 

Published : 10 Jan 2019 08:46 AM
Last Updated : 10 Jan 2019 08:46 AM

தமிழ் மீதான அவநம்பிக்கை குறைய வேண்டும்!- பாலசுப்ரமணியன் பொன்ராஜ் பேட்டி

தமிழின் நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகளில் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ஒருவர். ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ஆகிய இரு தொகுப்புகளும் அவரது எதிர்கால எழுத்துகளின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துபவை. விரிவான வாசிப்பு, தத்துவப் பார்வை, சமூகப் பார்வை, விநோதப் புனைவில் ஈடுபாடு, அறிவியல் ஆர்வம், இசை என்று பல துறைகளின் விளைச்சலாக அவரது கதைகளைக் கூறலாம். அவருடன் உரையாடியதிலிருந்து…

உங்களை எழுத்தை நோக்கித் தள்ளியது எது?

தொடர் வாசிப்பே என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது. வாசிப்பதில் உள்ள பெரிய ஆபத்து எழுதுவதற்கு நகர்வது. எழுதுவதில் உள்ள பெரிய பலன் எழுதுவதை விட்டுவிட்டு வாசிப்புக்கே திரும்புவது. எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பையே அதிகம் விரும்புகிறேன். அதுதான் யாரையும் தொந்தரவூட்டாத நல்ல செயல்.

இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், அடுத்து என்ன?

திட்டமிடுவதில் எந்த உலக எழுத்தாளனுக்கும் நான் சளைத்தவனில்லை. ஆனால், எழுதுவதில் இன்னுமே பிறக்காத எழுத்தாளர்களுக்கு ஒரு படி மட்டுமே மேலே நிற்கிறேன் என்பதால் இப்போதைக்கு அறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. திட்டங்களை விவாதிப்பதற்கு என்ன! அவை நமது செயலைவிட பயனுள்ளவையாகவும், முக்கியமானவையாகவும் தோன்றினாலும், கனவின் சாயலுடையவை. ஆதலால், முழுக்க நிறைவேறும் சாத்தியக்குறைவுள்ளவையும்கூட.

முதல் தொகுப்பில் காணப்பட்ட யதார்த்தக் கதைகள் இரண்டாம் தொகுப்பின் மாயயதார்த்தக் கதைகளுக்கும் தத்துவக் கதைகளுக்கும் வழிவிட்டது ஏன்?

யதார்த்தக் கதைகள் என்ன செய்யும்? அவை அவற்றைப் பற்றியே அலுத்துக்கொண்டு வேறு வகைக் கதைகளுக்கு வழிவிட்டு நிற்கும். பல்வேறு தளங்களில் இயங்கிப்பார்க்கும் ஆர்வம் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு எழுவது இயல்புதானே. தனது பாணி என்ற ஒன்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் வரை அலைக்கழிப்புக்கு உள்ளாவதும் இயல்பானது. ஆனால், ஒருவர் தன்னுடைய பாணியைக் கண்டடைந்துவிட்டால் தனது படைப்புகளையே நகலெடுப்பவராக மாறிவிடுகிறார்; அதுவும் மை தீர்ந்துபோன நகல் இயந்திரத்தில் எடுப்பவராக. தவிர்க்கவே முடியாத அந்த விபத்தை முடிந்தவரை தள்ளிப்போடும் வரை எழுத்து உயிர்ப்போடிருக்கும் சாத்தியம் அதிகம்.

உங்கள் எழுத்தில் எந்தத் தத்துவவாதியின் தாக்கத்தை அதிகமாக உணர்கிறீர்கள்?

நல்ல இலக்கியப் படைப்பென்பதே வாழ்வைக் குறித்த தனிச்சிறப்பான பார்வையை அளிக்கிறது. தனிச்சிறப்பான பார்வையைத் தர்க்கபூர்வமாக ஒரு முறைமையில் வைத்துத் தொழில்நுட்பச் சொற்களால் விளக்க முனைந்தால் அதுவே தத்துவமாகிறது. வில்லியம் பர்ரோஸ், கொர்த்தஸார், ஃபிளாபர்ட், பெஸோவா ஏன் ஜேன் ஆஸ்டினுமேகூட எனக்குத் தத்துவ ஆசிரியர்களாகத் தெரிகிறார்கள்.

 எனது தத்துவப் பார்வையே புனைவுகளால் உருவானவை  என்றே நம்புகிறேன். அதே சமயம் நீட்ஷேவை வாசிக்கும்போது கவிதையை வாசிப்பதைப்போலுள்ளது. குறிப்பிட்ட தத்துவவாதியென்று யாருமில்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் யாவுமே ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை (இன்டெர்கனெக்டட்னெஸ்) என்ற கருத்தை உங்கள் கதைகளில் காண முடிகிறது. இதற்கும், மனிதர்கள் செயற்கையாக உருவாக்கும் பின்னிப் பிணைந்த நிலைக்கு உதாரணமான பொருளாதார மந்தநிலைக்கும் எப்படி முடிச்சுச் போடுகிறீர்கள்?

நம்மோடோ, இல்லை இந்தப் பிரபஞ்சத்தோடோ ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ள இணை என்று ஏதுமில்லை என்பதால், நாம் இந்தப் பிரபஞ்சத்தின் தனிச்சிறப்பான விதியான அநித்தியத்துக்கு நம்மை வெகுவாகப் பழக்கிக்கொண்டுவிட்டோம். அதைக் கடக்க முனையும் முயற்சியே சகல மனிதச் சிந்தனையும். அநித்தியத்தைப் பொருளாதாரத் துறையைவிட வேறெங்கே எளிதாக அறிய முடியும். நீங்கள் குடியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒரு நட்சத்திரம் உங்கள் கண் முன்னே சரிவதே பங்குச் சந்தையில் உங்கள் பங்குகளின் நிலையும்.

ஒருமை (சிங்குலாரிட்டி) என்ற பிரபஞ்சவியல் கருத்தாக்கத்தை உங்கள் கதையொன்றில் கண்டபோது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உங்கள் புனைவுக்கு அறிவியல் எந்த அளவுக்குப் பயன்படுகிறது?

ஆர்வமும் விசாரணையும் அறிவியலின் அடிப்படைத் தொடக்கங்கள். தர்க்க விளக்கமும் நிரூபணமும் அதற்கான விதிமுறைகளை வகுக்கின்றன. இதில் கடைசி ஒன்றைத் தவிர மீதியனைத்தும் புனைவுக்கும் சொந்தம். நான் அறிவியல் எழுத்தாளன் அல்ல. ஒரு புனைவெழுத்தாளன் எல்லாத் துறைகளையும் பயன்படுத்துவதைப் போலவே நானும் அறிவியலைப் பயன்படுத்தப் பயில்கிறேன். டான் டெலிலோவின் ‘ஜீரோ கே’ நாவலை வாசியுங்கள். அதை அறிவியல் புனைவென்று சொல்வோமா அல்லது தத்துவ நாவலென்று சொல்வோமா?

தத்துவத்தைச் சொல்லத்தான் கதை சொல்கிறீர்களா?

இல்லை. கதை அதன் தத்துவத்தைச் சொல்வதற்கு அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தில் சார்த்ரின் நாவல்களுக்கு இடாலோ கால்வினோ சொன்ன விமர்சனத்தையே நானும் முக்கியமெனக் கருதுகிறேன். சார்த்ரின் நாவலில் கதையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தத்துவம் முன்னிற்கிறது. நாவலில் கதைதான் முன்னிற்க வேண்டும் என்பது கால்வினோவின் வாதம்.

உங்கள் கதைகளைப் பார்க்கும்போது உங்கள் வேர்கள் இங்கு இல்லாமல் சர்வதேசத்தில் இருப்பதுபோலத் தோன்றுகிறதே?

ஹா… அவை அவ்வளவு தூரத்துக்குச் சென்றுவிட்டனவா! நமது தந்தையர் நிலத்தை எழுதினர், நமது தனையர் உலகை எழுதுவார்கள். அவர்களுக்கான ஓர் ஏவுதளத்தை உருவாக்குவதே நமது பணி.

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

பார்வை, ஆழம் போன்றவற்றைச் சார்ந்து புதுமைப்பித்தனும் பிரமிளும் எனக்குப் பிடிக்கும். மொழியைப் பயன்படுத்துவதில் கோணங்கியைப் பிடிக்கும்.

இந்தப் படைப்பைப் போல ஒன்று எழுதிவிட்டால் போதும் என்று எந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்வீர்கள்?

செர்வான்ட்டீஸின் ‘டான் கிஹோதெ (Don Quixote)’.

தமிழ்ப் படைப்பில் அதிசயங்கள் நிகழ என்ன செய்ய வேண்டும்?

தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் மீதுமான ஏளனமும் அவநம்பிக்கையும் குறைய வேண்டும். வரம்பில்லாத வாசிப்பும் முக்கியம். சுந்தர ராமசாமி சொன்னது பொருத்தமானது. உலக அளவிலான மாஸ்டர்களாக ஆக முடியாதென்றாலும் நாமும் முயன்றுபார்ப்பது நல்லது.

எந்த நேரங்களில், எந்தெந்த மனநிலைகளில் எழுதுகிறீர்கள்?

சிந்தித்துச் சோம்பிக் கிடத்தல் முடிவுறும் தருணங்களில். சில சமயம் ஒரு சொல்லால், கற்பனையால், காட்சியால், கனவால்கூட உந்தப்படுவதுண்டு என்பதால் குறிப்பிட்ட நேர ஒழுங்கென்று ஒன்றுமில்லை.

எழுதும்போது உங்களுக்கு நடந்த மேஜிக் என்று எதையாவது சொல்ல முடியுமா?

சமீபத்தில் ஓர் உயர்ரக மதுபான விடுதியில் அமர்ந்து ஒரு சிறுகதையை எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது கிஸ் எனும் ராக் குழுவினரின் ‘நான் உனைக் காதலிக்கவே உருவாக்கப்பட்டேன்’ பாடலைக் கதையில் ஓரிடத்தில் ஒலிக்கவிட்டேன். வாக்கியம் முற்றுப்பெறக்கூட இல்லை, அந்த விடுதியில் அப்பாடலை ஒலிக்கவிட்டனர். இத்தனைக்கும் அது பழைய பாடல். ஒரு படைப்பின் முழுமையே அதிசயம்தான்!

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x