Published : 15 Dec 2018 12:12 PM
Last Updated : 15 Dec 2018 12:12 PM

நூல்வெளி: படத்தொகுப்பு: கலையும் அழகியலும்

சினிமாவுக்கு வர நினைப்பவர்கள் பெரும்பாலும் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை போன்ற துறைகளையே தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். படத்தொகுப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டுபவர்கள். திரைப்படக் கல்லூரிகளில் கூட இயக்கம், ஒளிப்பதிவு இடம் கிடைக்கவில்லை என்றால்தான் படத்தொகுப்பு பாடத்தை எடுத்துப் படிக்கும் நிலை இருக்கிறது. இத்தனைக்கும் படத்தொகுப்புத் துறை என்பது பயந்துவிலகச் செல்ல வேண்டிய துறையல்ல.

படத்தொகுப்பு மேசையில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது. ஒரு திரைப்படத்துக்கான படத்தொகுப்பாளர்தான் (எடிட்டர்) இரண்டாம் இயக்குநர். இயக்குநரின் கண்கள் ஒளிப்பதிவாளர் என்றால் அவரது மூளை எடிட்டர்தான். ஒரு திரைப்பட எடிட்டரால் திரைக்கதைகளை மாற்றி அமைத்து கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியும்.

இதன் அடிப்படையில் சினிமாவில் ஒருவர் பிரபலமாக, நிபுணத்துவம் பெற, மிகச்சரியாக சினிமா கலையைக் கையாள படத்தொகுப்பைக் கற்றுக்கொள்வது அவசியம். படத்தொகுப்பு மற்ற எல்லா துறைகளுக்குமான அறிவை வளர்த்தெடுக்கும் என்கிறார் படத்தொகுப்பாளர் ஜீவா பொன்னுச்சாமி. திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் எழுதியுள்ள 'படத்தொகுப்பு: கலையும் அழகியலும்' படத்தொகுப்புக்கு என்றே தமிழில் வெளிவந்துள்ள முதல் புத்தகம்.

படத்தொகுப்பு என்றால் என்ன, படத்தொகுப்பு எப்படி நிகழ்கிறது, படத்தொகுப்புக்கான விதிகள், படத்தொகுப்பின் அவசியம், அடிப்படைத் தொழில்நுட்ப அம்சங்கள், படத்தொகுப்பின் ஐந்து முக்கியக் கூறுகள், காட்சிகளின் கோர்வை, பாடல் காட்சி- சண்டைக் காட்சிகளை படத்தொகுப்பு செய்யும் விதம், படத்தொகுப்பில் பயன்படுத்தப்படும் சிறப்பு உத்திகள், ஒலியில் படத்தொகுப்பு செய்யும் விதம், டைட்டில் பயன்பாடு, படத்தொகுப்பின் வகைகள், தொலைக்காட்சி படத்தொகுப்பு, படத்தொகுப்பு உதவும் மென்பொருட்கள், படத்தொகுப்பாளர்கள் குறித்த பட்டியல், படத்தொகுப்பாளர்களின் வரலாறு, படத்தொகுப்பின் செயல்பாடுகள், அதன் பயன்பாட்டு நுணுக்கம் என்று எல்லாவற்றையும் மிக எளிமையாகவும், அழகாகவும் ஜீவா பொன்னுச்சாமி 'படத்தொகுப்பு: கலையும் அழகியலும்' நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

'சிட்டி ஆஃப் காட்', 'ஆடுகளம்' என்ற இரு படங்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு சிறந்த படத்தொகுப்புக்கான முறைகளை விளக்கியிருப்பது படத்தொகுப்பை நுட்பமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. படத்தொகுப்புக் கலையைப் புரிந்துகொள்ள படத்தொகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் ஆய்வு செய்து பார்த்தாலே கிட்டத்தட்ட படத்தொகுப்பு என்பது என்ன என்று புலப்படும். அதற்கு மிக உன்னிப்பாக படத்தை மட்டும் பார்த்தாலே போதுமானது என்ற யோசனையையும் நூலாசிரியர் ஜீவா பொன்னுச்சாமி முன்வைக்கிறார்.

திரைப்படத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், எடிட்டிங்கில் சாதிக்கும் எண்ணம் உடையவர்கள் அனைவருக்குமான மிகச் சிறந்த வழிகாட்டி நூலாகவும், கையேடாகவும் இந்த நூல் திகழும். படத்தொகுப்புக் கலையை கற்றுக்கொள்ள சில கல்வி நிறுவனங்களே இருக்கும் சூழலில் இப்புத்தகம் காலத்தின் அவசியம்,.

 

படத்தொகுப்பு: கலையும் அழகியலும்

ஜீவா பொன்னுச்சாமி D.F.Tech.

விலை ரூ.350

 

வெளியீடு:

நிழல் - பதியம் பிலிம் அகாடமி,

33,இராமமூர்த்தி தெரு,

தாண்டவமூர்த்தி நகர்,

வளசரவாக்கம்,

சென்னை - 78.

அலைபேசி: 9444484868

 

arasunizhal@gmail.com

www.nizhal.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x