Published : 15 Dec 2018 09:15 AM
Last Updated : 15 Dec 2018 09:15 AM

கல்யாணத்தில் ராமாயணம்

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவரும் செஞ்சி குறிஞ்சி இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜெ.இராதாகிருஷ்ணன் - வே.ப.தனப்ரியா திருமண விழா கடலூரில் கடந்த டிசம்பர் 11-ல் நடந்தது. திருமண நிகழ்வில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, திருவேங்கட கண்டர் எழுதிய ‘ஏற்றப்பாட்டு இராமாயணம்’ வெளியிடப்பட்டது. 1,000 அடிகளில் தாள்சுவடிகளில் அவர் எழுதிய பிரதி அது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறைத் தலைவர் ய.மணிகண்டன் வெளியிட, கவிஞர் செஞ்சி தமிழினியன் பெற்றுக்கொண்டார். திருமண விழாக்களில் இப்படியான நூல் வெளியீடுகள் தொடரட்டும்.

ஆங்கிலத்தில் ‘கடலுக்கு அப்பால்’

தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றான ‘கடலுக்கு அப்பால்’, ‘பியாண்ட் தி ஸீ’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்தாளராக வாழ்ந்து மறைந்த ப.சிங்காரத்தின் இந்நாவல், அவரது காலத்துக்குப் பின்னர் தமிழ் இலக்கியப் பரப்பில் கொண்டாடப்படும் படைப்பாகும். மலேசியாவின் பினாங் நகரைக் கதைக்களமாகக் கொண்ட இந்நாவல், இரண்டாம் உலகப் போர், சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ., படை, ஜப்பானிய படையெடுப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை விரிவாகப் பேசுவது. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.கார்த்திகேசு மொழிபெயர்ப்பில், பினாங்கின் ‘அரேகா புக்ஸ்’ பதிப்பக வெளியீடாக வெளியாகியிருக்கும் நூல் இது.

துளித்துளியாய்ப் பெருவெள்ளம்

மேடைப் பேச்சோ, தொலைக்காட்சி விவாதமோ - என்று அழுத்தமான வாதங்களை நயத்துடன் முன்வைத்து கேட்பவர்களை ஈர்ப்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். 40 ஆண்டுகால மேடைப் பேச்சு, 31 நூல்கள், 11 சிறு வெளியீடுகள் என்று தொடர்ந்து இயங்கினாலும், ‘வாட்ஸ்அப்’ தவிர எதையுமே வாசிக்காதவர்களையும் கருத்தில் கொண்டு தினமும் ‘வாட்ஸ்அப்’ வழியாக ‘ஒரு நிமிடச் செய்தி’ சொல்லிக்கொண்டிருக்கிறார். இன்றுடன் ஆயிரமாவது செய்தியை எட்டுகிறார். வாழ்த்துகள் சுபவீ!

10-வது ஆண்டாக புத்தகத் திருவிழா நடத்தும் திருச்சி பள்ளி

திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளி, பிராட்டியூர் பள்ளி, ‘டயல் ஃபார் புக்ஸ்’ இணைந்து கடந்த வாரம் நடத்திய புத்தகத் திருவிழா மாணவர்கள், பொதுமக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து 10-வது ஆண்டாக நடத்தப்பட்டிருக்கும் புத்தகத் திருவிழா இது. நான்கு நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுமார் 10,000 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். ரூ.9 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. பல்துறை கருத்தாளர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். பள்ளி மாணவர்களுக்கிடையே, ‘வீட்டுக்கொரு நூலகம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி, புத்தகத் திருவிழாவை நடத்திவருவதாகத் தெரிவிக்கிறார் எஸ்.ஆர்.வி. பள்ளி இணைச்செயலர் சத்யமூர்த்தி. தொடரட்டும் நற்பணி.

குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கவிஞருமான வா.செ.குழந்தைசாமியின் இரண்டாமாண்டு நினைவு மற்றும் தமிழ் மேம்பாட்டு விருது வழங்கும் விழா, நாளை (ஞாயிறு) காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக டிஏஜி அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், எழுத்தாளர்கள் பிரேமா நந்தகுமார், ஆ.இரா.வேங்கடாசலபதி, மூத்த விண்வெளி அறிஞர் நா.கணேசன் மூவருக்கும் தலா ரூ.1 லட்சம் விருது வழங்கப்படவுள்ளது. மேனாள் தலைமைச் செயலர் பி.எஸ்.இராகவன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன், முன்னாள் ஆளுநர் ச.ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தொகுப்பு: மு.முருகேஷ், கே.கே.மகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x