Published : 06 Dec 2018 07:32 PM
Last Updated : 06 Dec 2018 07:32 PM

நூல் வெளி: தேசிய கீதங்களின் பின்னணி

சுதந்திர தினம், குடியரசு தினம், அரசு நிகழ்ச்சிகள், தேசிய விழாக்கள் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது தேசிய கீதம்.  எங்கு தேசிய கீதம் ஒலித்தாலும் நாம் அதற்கு மரியாதை செலுத்தத் தவறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தேசிய கீதம் பாடும் போது நாம் இந்தியர்கள் என்ற பெருமிதத்தை உணர்கிறோம்.

தேசிய கீதம் பாடப்படுவதன் மூலம் நாட்டின் மீதான பற்று அதிகரிக்கிறது. அக்கறையும், பொறுப்புணர்வும் கூடுகிறது என்ற உளவியலை அறிந்து வைத்திருக்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. வருமான வரித்துறை அதிகாரியான இவர் நம் நாட்டின் தேசிய கீதத்தின் வரலாற்றை வார்த்தைகளில் வடித்தெடுத்து 'நாட்டுக்கொரு பாட்டு' நூலின் மூலம்  தேர்ந்த எழுத்தாளராய் வசீகரிக்கிறார். 23 அத்தியாயங்களில் 44 நாடுகளின் தேசிய கீதங்கள் உருவான வரலாற்றுப் பின்னணியை ஒரு கதை போல சொல்லிச் செல்கிறார். 

உதாரணத்துக்கு சில துளிகள்:

* சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே, நமக்கு தேசிய கீதம் கிடைத்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு அப்படி இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு, ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கழித்துதான் அவர்களுக்கு தேசிய கீதம் கிடைத்தது. அதுவும் முதலில் சொற்கள் இல்லாமல், இசையாக மட்டும் இசைக்கப்பட்டது. ஏன் அப்படி?

*  சோசா, ஜுலு, செசோதோ, ஆப்ரிகன்ஸ், ஆங்கிலம் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் சில வரிகள் எடுக்கப்பட்டு ஒரு நாட்டின் தேசிய கீதம் இயற்றப்பட்டுள்ளதே. அது எந்த நாடு? மொழி மாற்றப்பட்ட அப்பாடல் இன்று தான்சானியா, ஜாம்பியா நாடுகளின் தேசிய கீதமாகவும் இருக்கிறதே?

* ஐந்தே வரிகளில், 31 எழுத்துகளில் தேசிய கீதம் சாத்தியமா? சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறது ஜப்பான்.  ஆனால், ஜப்பானிய மொழியில் உருவாக்கப்பட்ட அந்த வாக்கா பாடலுக்கு இளைய தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

* விக்டோரியா திரையரங்கத்தின் திறப்பு விழாவில் இசைக்கப்பட்ட பாடல் சிங்கப்பூரின் தேசிய கீதமான சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

* இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் இலங்கை, வங்கதேசத்துக்கும் தேசிய கீதம் எழுதியது எப்படி?

* புனிதத்தன்மையுடன் ஆராதிக்கப்படும் தேசிய கீதம் உலகில் அதிக முறை மாற்றப்பட்டுள்ளது. அது எந்த நாட்டில்?

* மாலத்தீவுக்கு தேசிய கீதம் தந்தவர் ஒரு நீதிபதி. மொரிஷீயஸ் நாட்டுக்கு தேசிய கீதம் தந்தவர் ஒரு போலீஸ்காரர். அதன் வரலாறு என்ன?

* தன் நாட்டுக்கு தேசிய கீதம் இல்லை என்ற வருத்தத்தில் பேருந்தில் பயணிக்கும்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடல் எழுதினார். அதுவே பின்னாளில் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் ஆனது.

* ஒரு சினிமா பாடலிலிருந்து உருவானதுதான் சீனாவின் தேசிய கீதம்.

* தேசிய விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மட்டுமல்ல அந்த நாட்டு மரபு வழி இசையிலும், ஜனரஞ்சக இசையிலும்கூட பிரான்ஸ் நாட்டு கீதம் இடம்பிடிக்கிறது. அதற்கான தனித்துவம் என்ன?

* உலகின் மிக நீளமான தேசிய கீதம் அமெரிக்காவுடையது. அமெரிக்காவின் பாடலை முழுவதும் பாடி முடிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது

இப்படி பல சுவாரஸ்யங்களை நாட்டுக்கொரு பாட்டு நூலில் அள்ளித் தெளித்து அழகு சேர்த்திருக்கிறார் ஆசிரியர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதத்தைப் பதிவு செய்து, அதற்கான அர்த்தத்தை தமிழில் கொடுத்திருப்பது நூலின் தனிச் சிறப்பு. பல நாட்டு தேசிய கீதங்களைத் தொகுப்பது சாதாரண பணியல்ல. அந்தக் கடினமான பணியை சுவையும் பொருளும் மாறாமல் மொழிபெயர்த்து அதற்கான வரலாற்றையும் தனக்கே உரிய பாணியில் எழுதி ஈர்த்திருக்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

'நாட்டுக்கொரு பாட்டு' நூல் குழந்தைகள், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 'நாட்டுக்கொரு பாட்டு' நூலின் சில பகுதிகளையாவது சேர்த்தால் மட்டுமே அதற்கான நோக்கம் நிறைவேறும்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி 'தி இந்து' வெளியீடாக நாட்டுக்கொரு பாட்டு, பொருள்தனைப் போற்று ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார்.

புத்தகம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தி இந்து தமிழ்,

கஸ்தூரி மையம்,

124 வாலாஜா சாலை,

சென்னை - 600 002.

ஆன்லைனில் பெற:

https://tamil.thehindu.com/publications/

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x