Published : 10 Nov 2018 08:31 AM
Last Updated : 10 Nov 2018 08:31 AM

கடலூரைக் கலக்கவிருக்கும் குழந்தைகள் புத்தகத் திருவிழா

குழந்தைகள் தினமான நவம்பர் 14 தொடங்கி 21 வரைக்கும் கடலூரில் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா நடக்கவுள்ளது. இந்த ஆண்டின் இலக்கு, ‘ஒரு லட்சம் புத்தகங்கள்; ஒரு லட்சம் குழந்தைகள்’. எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் தலைமையில் கடலூர் தன்னார்வ நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இவ்விழாவைத் தொடங்கிவைக்கிறார். நவம்பர் 18-ல் மருதன், விழியன், ரமேஷ் வைத்யா ஆகியோருக்கு சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. குழந்தைகளை வாசிக்கவைப்பதற்கான எல்லா புத்தகங்களையும் குவித்துவருகிறார்கள்.

திருவொற்றியூரின்சிந்தனைச் சாரல்

நூலகங்கள் வாசிக்க மட்டுமல்ல, விவாதிப்பதற்கும்தான். திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திவரும் சிந்தனைச் சாரல் என்ற மாதாந்திர இலக்கிய நிகழ்வு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இன்று மாலை (நவம்பர்-10) நடக்கும் 37-வது நிகழ்வில் சமூகச் யற்பாட்டாளர் ஓவியா சமூக வலைதளங்களைப் பற்றி பேசுகிறார்.

சென்னைத் தமிழ் சிறப்புக் கருத்தரங்கம்

சென்னை மாநகரத்தையும் அதன் பிரத்யேக வட்டார மொழியாகிய சென்னைத் தமிழையும் பற்றிய ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னைப் பல்கலைக்கழகம். மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், இதழியல், கலையியல், உணவியல், இலக்கியவியல், திரைப்படவியல் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களோடு எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்கிறார்கள். சென்னையும் அதன் தமிழும் சினிமாவிலும் இலக்கியத்திலும் தனக்கான அரசியலைப் பேச ஆரம்பித்திருக்கும் வேளையில் பல்கலைக்கழக ஆய்வுகளும் அத்திசையில் பயணிப்பது முக்கிய நகர்வு. நவம்பர் 11 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா கலையரங்கில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தஞ்சை ப்ரகாஷ் விருதுகள்

திருவாரூரிலிருந்து நடத்தப்படும் ‘பேசும் புதிய சக்தி’ இதழ், இந்த ஆண்டுக்கான தஞ்சை ப்ரகாஷ் விருதுகளை அறிவித்துள்ளது. சிறந்த ஆளுமை விருது சி.எம்.முத்து, க்ருஷாங்கினி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. நாவலுக்கான விருது எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’க்கும் சிறுகதை விருது அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்’ தொகுப்புக்கும் கவிதை விருது ரவி சுப்ரமணியத்தின் ‘விதானத்து சித்திரம்’ தொகுப்புக்கும் கட்டுரை விருது கோ.மோகனரங்கனின் ‘நூலகத்தால் உயர்ந்தேன்’ நூலுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தியடோர் பாஸ்கரனுக்கு மரியாதை

தமிழின் முக்கியமான சூழியல் எழுத்தாளரான சு.தியடோர் பாஸ்கரன் இதுவரை சூழியல் சார்ந்து எழுதியிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் ஒரே நூலாக வெளிவருகிறது. ‘கையிலிருக்கும் பூமி’ எனும் இந்நூலை ‘உயிர்மை பதிப்பகம்’ கொண்டுவருகிறது. நவம்பர் 10 மாலை 6 மணிக்கு சென்னை புக் பாயிண்ட் அரங்கில் நடைபெறவுள்ள வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, இயக்குநர் மிஷ்கின், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், சூழியல் செயல்பாட்டாளர் சுந்தர் ராஜன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் பேசுகின்றனர். ரூ.600 விலையுள்ள நூல், வெளியீட்டு அரங்கில் ரூ.400-க்குக் கிடைக்கும்.

என் பெயரை எப்படி வைக்கலாம்?

சு.வெங்கடேசன் எழுதியிருக்கும் சமீபத்திய நாவலில் ஒரு கதாபாத்திரத்துக்கு பொதியவெற்பன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ‘சண்டக்கோழி’, ‘சர்கார்’ படங்களைச் சுட்டிக்காட்டி சு.வெங்கடேசனுக்குத் திறந்த மடல் எழுதியிருக்கிறார் எழுத்தாளரும் கலை இலக்கிய விமர்சகருமான வே.மு.பொதியவெற்பன். புறமுதுகில் அம்பெய்து கொல்லும் ஒரு பாத்திரத்துக்கு என் பெயரை வைத்திருப்பது சரியா என்பது அவரது ஆதங்கம்.

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x