Published : 04 Nov 2018 12:54 AM
Last Updated : 04 Nov 2018 12:54 AM

சார்லிக்கு முனைவர் பட்டம்

சார்லிக்கு முனைவர் பட்டம்

சார்லியை நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும்தான் பெரும்பாலானோருக்குத் தெரியும். அவர் தீவிர இலக்கிய வாசகரும்கூட. நவீன நாடக இயக்கத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர். கோவில்பட்டியில் இருந்தபோதே கி.ரா., கோணங்கி ஆகியோரின் நட்புவட்டத்தில் இருந்தவர். சென்னைக்கு வந்த பிறகு பூமணி, ஞாநி ஆகியோருடன் நாடக முயற்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சார்லிக்கு சமீபத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டி ருக்கிறது.

பத்து பெண்களின் கதை

புகழ்பெற்ற இந்திய ஆங்கில நாவலாசிரியர் அனிதா நாயரின் ‘ஈட்டிங் வாஸ்ப்ஸ் (Eating Wasps)’ எனும் புதிய நாவலில் உயிரிருப்புக்கே அச்சுறுத்தலைச் சந்தித்த பத்து பெண்களின் கதையை எழுதியுள்ளார். “சமாதானத்தைப் பேணுவது எப்படி என்பதை இலக்கியம் கற்றுத்தருகிறது.

காலம் ஒவ்வொரு வெட்டுப் புண்ணையும், ஒவ்வொரு அடியையும், ரத்தம் வழியும் ஒவ்வொரு காயத்தையும் சரிசெய்யும்” என்று இந்த நாவலின் கதாபாத்திரம் ஸ்ரீலக்ஷ்மி சொல்கிறாள்.

ந.முத்துசாமிக்குகோவையின் நாடகாஞ்சலி

எழுத்தாளரும் தமிழின் நவீன நாடக முன்னோடியுமான ந.முத்துசாமிக்கு உடல்வெளி நாடக நிலம் சார்பில் கடந்த அக்டோபர் 31 அன்று கோவையில் நடத்தப்பட்ட நினைவஞ்சலிக் கூட்டம் ஒரு நாடகாஞ்சலியாகவே அமைந்துவிட்டது. கவிஞர் புவியரசு தலைமையில் நடந்த கூட்டத்தில், கோவையின் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள். ந.முத்துசாமியின் நாடகங்களில் சில பகுதிகளைக் கல்லூரி மாணவர்களே இயக்கி நடித்து, அவருக்கு மரியாதை செய்தனர். நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்று குழுமியிருந்த கூட்டம் கலைக்கும் இலக்கியத்துக்குமான மையப்புள்ளியாக ந.முத்துசாமி இயங்கியதை எடுத்துக்காட்டியது.

- ச.ச.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x