Last Updated : 20 Oct, 2018 09:38 AM

 

Published : 20 Oct 2018 09:38 AM
Last Updated : 20 Oct 2018 09:38 AM

ஐம்பதாண்டு பொதுப்பணிக்கு மரியாதை

மானா பாஸ்கரன்அண்ணாவின் முன்னிலையில் சென்னை கோகலே அரங்கில் மாநிலக் கல்லூரி மாணவராக வைகோ உரையாற்றி 50 ஆண்டுகள் ஆகின்றன. அவரது பொதுவாழ்க்கை 50 ஆண்டுகளைக் கடந்து நடைபோடுகிறது. இதனையொட்டி மதிமுக ‘வைகோ - பொதுவாழ்வுப் பொன்விழா’ என்கிற மலரைக் கொண்டுவந்திருக்கிறது.

சமூகப் பொதுவெளியில் தொடர்ந்து தமிழ் வாழ்வுரிமை காக்க குரல் கொடுக்கும் வைகோவின் ‘சிறையில் விரிந்த மடல்கள்’ என்கிற நூலை வெளியிட்டு பேசிய கருணாநிதியின் உரையோடு தொடங்கியிருக்கிறது இந்த மலர்.

சே குவேராவைப் பற்றி வைகோ எழுதியிருந்ததைக் கருணாநிதி சுட்டிக்காட்டுவதைப் படிக்கிறபோது உலக அரசியல் வரலாற்றின் மீதான வைகோவின் பிடிப்பும் அதன்வழி மானுடத்தின் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையும் புரிகிறது. இதே போல இம்மலரில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாவுக்கு தம்பி நான்... எனக்கு கோபால்சாமி’ என்று வைகோவின் இன்னொரு புத்தகத்துக்குக் கருணாநிதி எழுதிய அணிந்துரையையும் சேர்த்திருப்பது இருவருக்குமிடையேயான அன்பின் அடர்த்தியை எடுத்துச்சொல்கிறது.

இத்தருணத்தில் இம்மலரின் முக்கிய அங்கம் வகிக்கும் மற்றொரு கட்டுரை ‘திராவிட இன முழக்கம் அண்ணன் வைகோ’ என்கிற தலைப்பிலானது. அதை எழுதியிருப்பவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் எழுதியிருக்கும் கட்டுரையில் அவரது இயல்பான நகைச்சுவை உணர்வும் இழையோடுகிறது. ‘கல்லூரி பேச்சுப் போட்டிகளில் எதிரும்புதிருமாக நின்று வாதிடுவோம். படிக்கிறபோதே பதற்றமாகத்தான் காணப்படுவார், சண்டைக்குப் போகத் துடிக்கும் குதிரைக்கும் இல்லா வேகம் இவரிடம் இருக்கும்’ என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் துரைமுருகன்.

வைகோவின் வழிநிற்கும் அவரது சகாக்களும் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எழுதியுள்ள கட்டுரைகள் அவரது அரசியல் ஆளுமையை விளக்குகின்றன. பத்திரிகையாளர்களும் இலக்கியவாதிகளும் எழுதியுள்ள கட்டுரைகளோ அவரது கலை இலக்கிய ஈடுபாட்டையும் உணர்த்துகின்றன. வைகோவைப் பற்றிய வலம்புரிஜானின் உரைப் பதிவும், எம்.டி.வாசுதேவன் நாயருடனான வைகோவின் சந்திப்பும் அதன் சிறு உதாரணங்கள்.

தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

வைகோ: பொதுவாழ்வுப் பொன்விழா மலர்

ப.அருணகிரிநாதன்

வெளியீடு: மதிமுக, ‘தாயகம்’,

சென்னை-8.

விலை: ரூ.500

தொடர்புக்கு:

044 - 2851 6565

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x