Published : 14 Oct 2018 01:15 AM
Last Updated : 14 Oct 2018 01:15 AM

பா.ரஞ்சித் தொடங்கியிருக்கும் ‘கூகை’ நூலகம்

ஒட்டுமொத்த சமூகமும் வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திவரும் இயக்குநர் பா.ரஞ்சித், ‘கூகை’ நூலகம் மற்றும் திரைப்பட இயக்கம் தொடங்கியிருப்பது அறிவுலகத்தின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ரஞ்சித்தின் ‘நீலம்’ அறக்கட்டளை சார்பாக சென்னை வளசரவாக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்நூலகம் ஓவியம், சினிமா, இலக்கியம், நாடகம், இசை என பல்வேறு கலைத் துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கூகையை ஒரு அபசகுனத்தின் வெளிப்பாடாகவும் எதிர்மறையான தாகவும் தமிழ்ச்சூழலில் பார்க்கப்படும் மரபு இருக்கிறது. எதிர்மறையானதாகக் கருதப்படும் கறுப்பு நிறத்தைப் பெரியார் கையிலெடுத்ததைப் போல இந்த நூலகத்துக்கு ‘கூகை’யின் பெயரைச் சூட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள் ‘கூகை’ அமைப்பினர். நூலகத் தொடக்க விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முழுநாள் கருத்தரங்குகள் நடைபெற்றன. சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், விமர்சகர்கள் எனப் பல்வேறு ஆளுமைகள் பங்குபெற்றார்கள். இதுபோன்ற உரையாடல்களைத் தொடர்ந்து சாத்தியப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

- ரா.பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x