Published : 14 Oct 2018 01:06 AM
Last Updated : 14 Oct 2018 01:06 AM

இந்திரா சிவசைலம் அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷுக்கு விருது

இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் 9-வது விருது, சரஸ்வதி வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷுக்கு வழங்கப்பட்டது.

கர்னாடக இசைப் பணியில் ஈடுபட்டு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் அதன் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பரப்பும் கலைஞர்களுக்கு இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 9-வது இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, சரஸ்வதிவீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷுக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

சரஸ்வதி வீணை வித்வாம்சினியான டாக்டர் ஜெயந்தி குமரேஷுக்கு கர்னாடக இசையில் இருக்கும் ஆழமான அறிவு, கர்னாடக இசையின் பாரம்பரியத்தை பேணிவளர்ப்பதோடு, அதில் பல பாணி வாசிப்புகளையும் கொண்டுவந்த நேர்த்தி, எல்லைகளைக் கடந்து இசையில் பலதரப்பட்ட மக்களையும் சங்கமிக்கச் செய்யும் ஆற்றல்போன்ற சிறப்பு அம்சங்களே இவருக்கு இந்த விருதை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி தனது வரவேற்புரையில், இந்திரா சிவசைலம் அறக்கட்டளை - மியூசிக் அகாடமி இடையிலான நீண்டகால நட்புறவு பற்றி விரிவாகப் பேசினார். மியூசிக் அகாடமியில் நவராத்திரி விழாவோடு ஒருங்கிணைத்து பார்க்கக்கூடிய வகையில் இந்த விழா உருவெடுத்திருக்கிறது என்றார்.

விருது பெற்ற டாக்டர் ஜெயந்தி குமரேஷை, இந்திரா சிவசைலம் அறக்கட்டளை தலைவர்மல்லிகா சீனிவாசன் பாராட்டிப் பேசும்போது, ‘‘இசைக் கருவிகளின் அரசி என்று கருதப்படுவது சரஸ்வதி வீணை. அதில் ஆத்மார்த்தமான இசையை வழங்கி, கேட்பவரின் மனதை பரவசப்படுத்தக்கூடிய அற்புதமான கலைஞர் ஜெயந்தி. இசையின் உள்ளடக்கம், அதை வெளிப்படுத்தும் நேர்த்தி, அதிலும் புதுமையை விட்டுவிடாத லாவகத்தோடு உலகம் முழுவதும் சரஸ்வதி வீணையின் பெருமையை கொண்டுசேர்க்கும் அற்புதமான வீணை வித்வாம்சினியான ஜெயந்தி குமரேஷுக்கு மியூசிக் அகாடமிஒத்துழைப்போடு விருது வழங்கி கவுரவிப்பதில் இந்திரா சிவசைலம் அறக்கட்டளை பெருமை கொள்கிறது’’ என்றார்.

விருதைப் பெற்றுக்கொண்ட ஜெயந்தி குமரேஷின் ஏற்புரையும் சுவாரசியமாக இருந்தது. சரஸ்வதி வீணை தனக்கு எழுதிய கடிதத்தைப் படிப்பதுபோல ஏற்புரை நிகழ்த்தினார். அது, வீணையை மீட்டுவதில் மட்டுமல்லாது, அவரது பேச்சிலும் வெளிப்பட்ட மனோதர்மமாக விளங்கியது.

‘‘இதை எனக்கு கிடைத்த விருதாக கருதவில்லை. என் சரஸ்வதி வீணைக்குக் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். இதன்மூலம் என் இசைப் பணி இன்னும் சிறக்கும். இந்த அங்கீகாரத்துக்கும், பாராட்டுக்கும் மனப்பூர்வமான நன்றியை இந்த சபைக்கும், இந்திரா சிவசைலம் அறக்கட்டளைக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனது கர்னாடக இசைப் பயணத்தை மேலும் சிறப்பான முறையில் கொண்டு செல்ல உத்வேகம் தரும்’’ என்றார்.

மியூசிக் அகாடமி செயலாளர்கள் டாக்டர் சுமதி கிருஷ்ணன், வி.ராம் ஆகியோரும் பேசினர். ஜெயந்தி குமரேஷ் தன் குழுவினருடன் வழங்கிய சரஸ்வதி வீணை இசை நிகழ்ச்சியும் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x