Published : 13 Oct 2018 08:57 AM
Last Updated : 13 Oct 2018 08:57 AM

நூல் நோக்கு: உணர்விழைகளால் நூற்கப்பட்டவை

இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் நட்சத்திரமும் தேனீரும் குடையும் ஜன்னலும் நம்மிடம் பேசுகின்றன. எந்த வார்த்தைகளிலும் போலி இல்லை. கவிதைக்கு உண்மையே அழகு என்பதை அழுந்தச் சொல்கின்றன. கால் பட்டு உடைந்தது வானம் மட்டுமல்ல, வாசகனின் மனமும்தான்.

- பா.அசோக்

கால் பட்டு

உடைந்தது வானம்

எஸ்தர்

போதிவனம் பதிப்பகம்

ராயப்பேட்டை,

சென்னை-14.

விலை: ரூ.120

 98414 50437

கசப்பை எழுதுதல்

தமிழ்ச் சிறுகதையின் விளைநிலமாகக் கருதப்படும் தென்தமிழகத்துக்கு இணையாக இப்போது வடதமிழகப் படைப்பாளிகளும் எழுதிவருகிறார்கள். திருநின்றவூரிலிருந்து கதைசொல்லியாக உருவாகியிருக்கிறார் விஷால் ராஜா. இவரின் முதல் தொகுப்பு இது. வாசகனை முடிவுகளுக்கு அழைத்துச் செல்லாத கதைகள் இவருடையது. புழுக்கமான மனித மனங்களுக்குள் நிரம்பி வழியும் கசப்புணர்வை இவரது எழுத்து கூர்மைப்படுத்துகிறது. நிதானிப்பதற்குள் நம் கன்னத்தில் ஓர் அறை விழுகிறது. ஏன் அடிக்கிறார்கள் என்ற காரணம் நமக்குச் சொல்லப்படுவதில்லை. வலிமையானவர்கள் மட்டுமே இந்த உலகில் வாழ்வதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். வலிமையற்றவர்களின் குமைச்சலை இதுபோன்று கதைகளாக எழுதித்தான் தீர்க்க வேண்டியுள்ளது. உதிரியான சம்பவங்களினூடாகக் கதைசொல்லும் தன்மை இவரிடம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், கதைகளை மொழியின் இருண்மையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

- சுப்பிரமணி இரமேஷ்

எனும்போதும்

உனக்கு நன்றி

விஷால் ராஜா

ஜீவா படைப்பகம்

வேளச்சேரி, சென்னை-45.

விலை: ரூ.99

  99942 20250

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x