Published : 23 Sep 2018 08:57 AM
Last Updated : 23 Sep 2018 08:57 AM

தற்கால மொழியில் போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு!

கிறித்தவப் பாதிரியார்கள், காலனிய ஆட்சியாளர்கள் என பலதரப்பினரும் திருக்குறளை மொழிபெயர்த்தனர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. திருக்குறள் அச்சு வடிவம் பெற்ற 1812-லேயே எஃப்.டபில்யு.எல்லீஸ் திருக்குறளின் சில பகுதிகளை மொழிபெயர்த்தார். பின்னர், அப்பிரதி 1816-ல் அச்சு வடிவம் பெற்றது. டபில்யு.எச்.துறு 1840-ல் திருக்குறளின் சில பகுதிகளை மொழிபெயர்த்தார். பின்னர், அவர் 1886-ல் லாசரஸுடன் இணைந்து இம்மொழிபெயர்ப்பைச் செழுமைப்படுத்தினார். இதே ஆண்டில், ஜி.யூ.போப் திருக்குறளை மொழிபெயர்த்தார். போப்தான் திருக்குறளை முதன்முதலாக முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

போப் மொழிபெயர்த்ததைப் பேராசிரியர்கள் வெ.முருகன், ப.மருதநாயகம் இருவரும் தற்காலத் தேவை சார்ந்து உருவாக்கியுள்ளனர். பொருண்மைசார் மொழிபெயர்ப்பு, பால் நடுநிலை வழக்கு ஆகிய புதிய தன்மைகளை வழங்கி சமகால ஆங்கில மொழிபெயர்ப்பாகத் தந்துள்ளதாக வெ.முருகன் கூறுகிறார். ப.மருதநாயகம், விரிவான ஆராய்ச்சிக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். ஆசியவியல் நிறுவனமும் மொரீசியஸில் உள்ள பன்னாட்டுத் திருக்குறள் அறக்கட்டளையும் இணைந்து, இங்கிலாந்து லிவர்பூல் நகரில் நடைபெற்ற இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் நூலை வெளியிட்டிருக்கிறார்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருந்தாலும் போப் பின்பற்றிய செந்நெறிப் பாங்கு விதந்து கூறத்தக்கது. தமிழுக்கான இலக்கண நூல்களை எழுதியவர் போப். சங்க இலக்கியங்களை அறிந்தவர். புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தவர். திருவாசகத்தில் ஈடுபாடு உடையவர். இவ்வகையில் தமிழ்ப் புலமையாளர் எனும் தகுதி போப்புக்கு உண்டு.

திருக்குறளைப் புனிதநூல் என்று போப்தான் முதன்முதலில் எழுதினார். அவரைப் பின்பற்றி பின்னர் ஒருசிலர் இச்சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளனர். திருக்குறளைப் புனிதநூல் என்றது விவிலியத்தைப் புனிதநூல் என்பதற்கு நிகரானது. திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு போப் எழுதியுள்ள முன்னுரையில் பல தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். குஜராத், மராட்டி ஆகிய பகுதிகளைத் திராவிடப் பகுதிகளாகக் கூறுகிறார். பஞ்ச திராவிடம் என்று கூறுகிறார். திருக்குறளின் காலம் கி.பி. 800-1000 என்று சொல்கிறார். சீவகசிந்தாமணி மொழியோடு திருக்குறள் மொழியை ஒப்பிட்டுப் பேசுகிறார். செயிண்ட் தாமஸ் மயிலாப்பூருக்கு வந்து தங்கியதும் அதே இடத்தில் திருவள்ளுவர் வாழ்ந்தது குறித்தும் பல்வேறு ஊகங்களை முன்வைக்கிறார். இக்காரணங்களால் என்னவோ இப்புதிய பதிப்பில் அந்த முன்னுரையைச் சேர்க்கவில்லை. போப்பைப் புரிந்துகொள்ள உதவும் முன்னுரையையும் இணைத்திருக்கலாம். சுமார் நூற்றிருபது ஆண்டுகளுக்கு முந்தைய மொழிபெயர்ப்பை சமகாலப் பிரதியாக உருவாக்கியுள்ள பேராசிரியர்களும், வெளியிட்டுள்ள நிறுவனமும் பாராட்டுக்குரியவை.

- வீ.அரசு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x