Published : 16 Sep 2018 11:55 AM
Last Updated : 16 Sep 2018 11:55 AM

20-ம் நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் பஞ்சாலைத் தொழிலாளியான குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வனயியல், பறவையியல், விலங்கியல், தாவரவியல், மலைவாழ் மக்களின் வாழ்வியல் எனப் பல ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருப்பவர்.

கொ.மா.கோதண்டத்தின் இலக்கிய வாழ்க்கையின் பெரும்பகுதிகள் மலைவாழ் மனிதர்களைப் பற்றிய படைப்புகளாலேயே நிறைந்திருக்கின்றன. வனயியல் சார்ந்த படைப்புகளுக்கு அவர் பளியர் இன மக்களுடன் பழகிய அனுபவங்கள் ஆதாரமாக இருந்திருக்கின்றன. ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளின் அடர்ந்த வனங்களில் தங்கியிருந்து.. வாழ்ந்து.. பெற்ற அனுபவங்களை எழுதியதாலேயே இவர் குறிஞ்சிச் செல்வர் ஆனார்.

ராஜபாளையத்தில் 60 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ‘மணிமேகலை மன்றம்’ இலக்கிய அமைப்பின் தலைவர் பொறுப்பை வகித்துவரும் கொ.மா.கோதண்டம், 100-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது ‘ஆரண்ய காண்டம்’ சிறுகதைத் தொகுப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுபெற்றது.

‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமியின் சிறுவர் இலக்கியப் பிரிவு பரிசு கிடைத்தது. மலேசிய தொலைதூரப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவரது படைப்புகள் ரஷ்யா, ஜெர்மனி, ஆங்கிலம், சிங்களம், வங்காளம், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

‘ஆரண்ய காண்டம்’, ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’ போன்ற நூல்கள் முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மலைவாழ் ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

இந்த நூல்களை வாசித்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சுப்பு, அப்போதைய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். அதன் நீட்சியாக வில்லிபுத்தூர் அருகேயுள்ள செண்பகத் தோப்பு ‘பளியர்’ இன மக்களுக்கு அரசின் சார்பில் 32 வீடுகள் கட்டித்தரப்பட்டன. அவர் பெற்ற விருதுகளைக் காட்டிலும் இந்த நிகழ்வு அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்தானே!

“குறிஞ்சிக்கு ஒரு கொ.மா.கோதண்டம்” என்றார் ந.பிச்சமூர்த்தி. “சங்ககாலக் குறிஞ்சிக் கபிலருக்குப் பிறகு மலை பற்றிய நூல்களை கொ.மா.கோதண்டம் தவிர்த்து யாருமே எழுதவில்லை. இருபதாம் நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்” என்றார் கி.ராஜநாராயணன்.

எளிமையான சொல்லாட்சி, சாதாரண மக்களின் வாழ்க்கை என இவரின் படைப்புகள் பெரும் வாழ்வியலை முன்வைக்கின்றன. கற்பனைகளைக் காட்டிலும் அனுபவங்கள் படைப்பாகும்போது அவை கூடுதல் நெருக்கம் தருவதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றின் இயற்கை குறித்த நூல்களில் கொ.மா.கோதண்டத்தின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. தன் வாழ்க்கையையும் படைப்புகளையும் இயற்கையோடு மிக நெருக்கமாக அர்ப்பணித்துக்கொண்டவர் கொ.மா.கோதண்டம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x