Published : 02 Sep 2018 01:26 AM
Last Updated : 02 Sep 2018 01:26 AM

கூத்து உரமேற்றிய கதைக்காரர்!

வெளி ரங்கராஜன்முத்துசாமியின் முதல் நாடகமான ‘காலம் காலமாக’ வெளிவந்து 50 வருடங்களாகின்றன. 1968-ல் ‘நடை’ பத்திரிகையில் வெளிவந்தது. அதுவரை சிறுகதை எழுத்தாளராகவே முத்துசாமி அறியப்பட்டிருந்தார். அவர் பிறந்து வளர்ந்த புஞ்சை கிராமப் பின்புலம், அதன் மனிதர்கள், அவர்களின் உறவு நிலைகள், பிறழ்ச்சிகள், அன்புப்பெருக்கு இவற்றை மையமிட்டே அவருடைய சிறுகதைகள் அமைந்திருந்தன. ‘எழுத்து’ பத்திரிகை உருவாக்கிய புதுக்கவிதை மனநிலையிலிருந்து இலக்கிய விமர்சனம், புனைவு, நுண்கலைகள் என விரிவுகொண்டு முத்துசாமியின் புதிய படைப்புகளுக்கு ஒரு களம் அமைத்தது ‘நடை’ பத்திரிகை.

‘காலம் காலமாக’ நாடகத்தைத் தொடர்ந்து அவருடைய ‘அப்பாவும் பிள்ளையும்’ நாடகமும், பின்னர் ‘நாற்காலிக்காரர்’ நாடகமும் வெளிவந்தன. இந்த நாடகங்கள் ஒரு அங்கத மொழியில் குடும்பம், சமூக அவலங்கள் குறித்த சித்திரங்களை முன்வைத்தன. இவற்றை எழுதும்போது தனக்கு யாரும் முன்னோடி இல்லை என்றே முத்துசாமி குறிப்பிடுகிறார். அசையும் பொருட்கள்தான் அவருக்கு உத்வேகமாக இருந்தன. புதுக்கவிதையில் நாட்டம் கொண்ட முத்துசாமி, தன்னுடைய நாடகங்களைக் ‘காட்சிக் கவிதைகள்’ என்றே குறிப்பிடுகிறார்.

முத்துசாமிக்கு ஏற்பட்ட தெருக்கூத்து நிகழ்வுகளின் பரிச்சயம் நம்முடைய மரபுக் கலைகளில் இயங்கும் வீரியமான அரங்கம் குறித்த கவனத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. கூத்துக்கும் நவீன நாடகத்துக்கும் இடையே ஒரு பாலமாக ‘கூத்துப்பட்டறை’ என்ற அமைப்பை

1977-ல் உருவாக்கினார். அரங்க அடிப்படைகளிலும், உடல் அசைவிலும், குரல் வளத்திலும் தேர்ந்த நடிகர்களை முதலில் உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பில் கூத்துப்பட்டறையில் நடிகர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன. புரிசை, தஞ்சை, நார்த்தேவன்குடிக்காடு பகுதிகளின் கூத்துக் கலைஞர்களை அழைத்து, அங்குள்ள கூத்து வடிவங்கள், தேவராட்டம், நவீன நாடக உத்திகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்பாடுகள் செய்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய ‘சுவரொட்டிகள்’, ‘கட்டியங்காரன்’, ‘உந்திச்சுழி’ ஆகிய நாடகங்கள் தெருக்கூத்தின் பாதிப்பினால் உருவானவையே.

ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் ஒத்துழைப்புடன் சுவரொட்டிகள் நாடகம் சென்னை லலித்கலா அகாடமியில் நிகழ்த்தப்பட்டபோது வெளிப்பட்ட பொறிகள் பிரமிக்கத்தக்கவையாக இருந்தன. சுவரொட்டிகளைக் குறியீடாகக் கொண்டு இன்று எதிர்கொள்ளும் பொதுவாழ்க்கையின் ஆரவாரத்தன்மைகளை அங்கதத்துடன் சொல்லும் இந்த நாடகத்தில் வெளிப்பட்ட நாடகமொழியும், அசாதாரணமான அணுகுமுறையும் ஒரு புதிய நாடகத்தின் இருப்பை உறுதிப்படுத்தின.

1980-களுக்குப் பிறகு முத்துசாமி எழுதிய நாடகங்களில் ‘நற்றுணையப்பன்’, ‘இங்கிலாந்து’, ‘படுகளம்’, ‘அர்ச்சுனன் தபசு’ ஆகிய நாடகங்கள் முக்கியமானவை. குப்பை, நறுமணம், காலம் கடந்தும் நூலேணி, எம்.ஜி.ஆரின் பிம்ப அரசியல், புஞ்சை நற்றுணையப்பன் என சமூகத்தில் இயங்கும் பல சரடுகளை ஒரு கொலாஜ் பாணியில் ஒருங்கிணைத்தது ‘நற்றுணையப்பன்’ நாடகம். மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போராட்டக் களனாக வடிவு கொண்டு அன்றைய நிகழ்வுகளைப் பின்பற்றிச் செல்லும் ‘படுகளம்’ நாடகம், திரௌபதியின் துகில், கூந்தல், பெண்ணின் உபாதைகள், கற்புநிலை குறித்த சண்டைகள், பெண்ணுடல் கொண்டாட்டம் என பீமன்-துரியோதனன் சண்டைகள் காலத்தின் குறியீடுகளாய் நீடித்துக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.

‘இங்கிலாந்து’ நாடகம், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு காந்தி உருவகப்படுத்திய தக்ளியின் ஆன்மபலம், கிராமிய மதிப்பீடுகள் மற்றும் தொன்ம அடையாளங்களின் இழப்பு, கோயில் கலாச்சாரத்தின் சாதிய முரண்கள் ஆகிய சமகாலப் பிரச்சினைகளை மையமிட்டிருந்தது. போர், காதல், பாலியல்தன்மை, மரணம் என நாடுகளின் போர் ஆயத்தங்களையும், ஆயத முனைப்புகளையும் சாடும் தொனி கொண்டிருந்தது ‘அர்ச்சுனன் தபசு’ நாடகம். இந்த நாடகங்கள் கூத்துப்பட்டறை சார்பாக முத்துசாமி, நடேஷ், பிரசன்னா ராமசாமி, பிரளயன் ஆகியோரால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இயக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல சார்த்தரின் ‘மீள முடியுமா?’, காம்யூவின் ‘கலிகுலா’, மார்க்குவெஸின் ‘நீண்ட சிறகுகளுடன் வயோதிகன்’, பிராண்டெலோவின் ‘ஆசிரியரைத் தேடிய ஆறு கதாபாத்திரங்கள்’ போன்ற பிறமொழி நாடகங்களும் முத்துசாமியின் முன்னெடுப்பில் கூத்துப்பட்டறையால் நிகழ்த்தப்பட்டன.

முத்துசாமியின் நாடகங்கள் கருத்துரீதியிலும், தொழில்நுட்பரீதியிலும் பல சோதனைகளை முன்வைத்தன. வழக்கமான கதை சொல்லும் போக்கு, சம்பிரதாயமான பாத்திர அமைப்பு ஆகியவற்றை மறுத்து இன்றைய சிதறுண்ட முகமிழந்த மனிதர்களையே அவர் முன்நிறுத்துகிறார். வண்டிச்சத்தம், சருகுகளின் ஓசை ஆகிய நாட்டுப்புற இசைக்கூறுகளாலும், கூத்துப் பாத்திரங்களின் நடன அசைவுகளாலும் அவர் பெற்ற உத்வேகங்கள் அவருடைய நாடகங்களில் எதிரொலிக்கின்றன.

கற்பனையையும், படைப்புணர்வையும் ஆரவாரமான பேச்சுகளாலும், விளம்பரக் கவர்ச்சிகளாலும் இழந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தை விளிக்கும் விதமாகவே அவருடைய நாடகங்கள் அமைகின்றன. மொழியின் உரத்த வாசிப்பும், உச்சரிப்பும் நம்முடைய கல்வியின் ஒரு பகுதியாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் முத்துசாமி, தன்னுடைய உடல் இயலாமைக்கு இடையிலும் கவிதை குறித்தும், ஓசைகள் குறித்தும், நடன அசைவுகள் குறித்தும் தன்னுடைய எண்ண ஓட்டங்களை இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்பவராக இருக்கிறார். தமிழ்ச்சூழலில் மரபுக்கலைகள் குறித்த கவனம் கூடியிருப்பதும், நவீன நாடக ஊடாட்டம் வலுப்பெற்றிருப்பதும் முத்துசாமியின் 50 ஆண்டு நாடக இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி!

- வெளி ரங்கராஜன், நாடக இயக்குநர்.

தொடர்புக்கு:

velirangarajan2003@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x