Last Updated : 18 Aug, 2018 09:51 AM

 

Published : 18 Aug 2018 09:51 AM
Last Updated : 18 Aug 2018 09:51 AM

வேர்களை இழந்த விமர்சகர்!

வி.எஸ்.நைபால் என்று அறியப்படுகிற வித்யாதர் சூரஜ்பிரசாத் நைபால் உயிரோடு இருந்திருந்தால் தனது 86-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். ஆகஸ்ட் 17, அவரது பிறந்தநாள். ஆனால், அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அஞ்சலிக் கட்டுரை எழுதுவதென்பது அவர் இந்தியாவின் மேல் கொண்டிருந்த அன்பு கலந்த கோபத்தைப் போன்று முரணானது.

1932-ல் ட்ரினிடாட் தீவில் பிறந்தவர் நைபால். கடந்த 11-ம் தேதி மறைந்தார். இந்திய நாவல்கள் மீது அவர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்தியா மீதும் அவர் தொடர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தவிரவும், இஸ்லாம் குறித்து வி.எஸ்.நைபால் இருவேறு கருத்துகளைக் கொண்டிருந்தார். அது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

இந்தியாவை இந்தியர்கள் அறிந்துகொள்ளஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்துக்குள் இந்தியா இருந்தபோது இங்கிருந்து ட்ரினிடாட்டுக்குப் புலம்பெயர்ந்தது நைபாலின் குடும்பம். மற்றவர்களால் அவர் ஒரு இந்தியராக அறியப்பட்டபோதிலும் தன்னால் இந்தியன் என்ற உணர்வைப் பெற முடியாத ஆதங்கம் அவர் வாழ்வின் இறுதி வரைக்கும் தொடர்ந்தது. அந்த ஆதங்கத்தை இந்தியா குறித்து அவர் எழுதிய கட்டுரைகளில் காண முடியும்.

1962 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் அவ்வப்போது இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் நைபால். அந்த அனுபவங்கள் கட்டுரைகளாக, அவர் எழுதிய வெவ்வேறு புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. அந்தக் கட்டுரைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, ‘இந்தியா: எஸ்ஸேஸ்’ எனும் புத்தகமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பெயர் தாங்கி வந்த கடைசிப் புத்தகம் அதுதான். இந்தியா குறித்த நைபாலின் எண்ணங்களை அறிந்துகொள்ள இந்த ஒரு புத்தகமே போதுமானது. இந்தியா குறித்து ஏற்கெனவே மூன்று தனித்தனி அபுனைவுப் புத்தகங்களை எழுதினார் நைபால். அவை பின்னாளில் ஒரே தொகுப்பாகவும் வெளிவந்தன. அந்த மூன்று புத்தகங்களின் சுருக்கப்பட்ட வடிவமாகவும் இந்தப் புதிய புத்தகத்தைச் சொல்லலாம்.

ஜம்ஷெட் ஜிம்மியான கதை!

1962-ல் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகிறார் நைபால். அப்போது, தான் பெருநகரவாசிக்கு உரிய அறிவை நோக்கி காலனித்துவ நபராக நடைபோட்டுக்கொண்டிருக்க, இயல்பிலேயே அத்தகைய அறிவைப் பெற்ற இந்தியர்களோ மேற்கத்திய நவீனங்களுக்கு அடிமையாகிக் கிடக்கிற அற்பத்தனம் அவரைப் பாதிக்கிறது. இதனால், இந்தியா என்பது நைபாலுக்கு ‘மாயச் சிந்தனை’யாகத் தோன்றியது. அந்தக் கருத்தை அவரின் இறுதிக்காலம் வரை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.

‘ஆங்கிலேயர்கள் கொடுத்த கல்வியைக் கற்பார்கள். பிறகு, இங்கிலாந்துக்குச் சென்று அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் படிப்பார்கள். ஆங்கிலேயர்களின் நிறுவனங்களில் பணிக்குச் சேர்வார்கள். அங்கு ஆங்கிலேயர்களின் வாயில் இந்தியப் பெயர் நுழையாது. எனவே, ஆனந்த் எனும் பெயர் ஆண்டியாகவும், தந்தேவா டேன்னியாகவும், ஜம்ஷெட் ஜிம்மியாகவும் மாறும். இதுபோன்று சுலபமாக வாயில் நுழையாத பெயர் உள்ளவர்களுக்கு மொத்தமாக ‘பண்ட்டி’ என்று பெயரிடுவார்கள் ஆங்கிலேயர்கள். பிறகு அந்த பண்ட்டி, வங்க இஸ்லாமியரையோ அல்லது பாம்பே பார்ஸியையோ திருமணம் செய்துகொள்வார். அவர்களது பிள்ளைகள் அவர்களை ‘டாடி மம்மி’ என்று அழைக்கும். ஆண்டியும் பண்ட்டியும் கோல்ஃப்கூட விளையாடுவார்கள். பிறகு, ‘இந்த ஆங்கிலேயர்களுக்கு அறிவே கிடையாது. இந்தியர்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டார்களா?’ என்று ஆங்கிலேயர்களையே திட்டுவார்கள்’ என்று தன் கட்டுரை ஒன்றில் எழுதுகிறார். இந்த இரட்டை நிலையைத்தான் ‘அற்பத்தனம்’ என்கிறார் நைபால்.

புராதனத்தின் பலிகடாக்கள்

“ஐரோப்பிய நூலகத்தின் ஒற்றை அடுக்குக்குக்கூட இந்தியாவின் மொத்த அறிவு தகுதியானதல்ல என்று மெக்காலே சொன்னதாக என் நண்பர் ஒருவர் சொன்னார். அது இன்று உண்மையாகிவருகிறது. ஏனென்றால், 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியர்களுக்கென்று தன்னியல்பான அறிவுசார் வாழ்க்கை இல்லை. அவர்கள் தங்களின் புராதன நாகரிகம் குறித்துப் பெருமை கொள்கிறார்கள். உண்மையில், அவர்கள் அதன் பலிகடாக்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லும் நைபால், “அறிவுத் தளத்தில் ஒரு புரட்சி ஏற்படாதவரை இது மாறாது” என்கிறார்.

டெல்லியை ‘நாட்டின் ஆபத்தான நிர்வாகத் தலைநகரம்’ என்ற நைபால் எழுப்புகிற முக்கியமான கேள்வி, “இந்தியாவில் ஏன் இன்னொரு காந்தி உருவாகவில்லை?”

“அரை வேட்டியா, ராட்டையா, கைத்தறியா, தோரோவா, ரஸ்கினா, டால்ஸ்டாயா, பிரம்மச்சரியமா, புலால் தவிர்த்தலா, மாட்டுப் பாலைக் குடிக்க மறுத்தலா அல்லது கழிவறையைச் சுத்தம் செய்தலா? முழுமையான காந்தியவாதியாக இருக்க இவை எதுவும் போதாது. ஏனென்றால், காந்தி என்பவர் லண்டனின் கலாச்சாரத்தை எதிர்கொள்ள முடியாதவராக இருந்த மூன்று ஆண்டுகளாலும் தென்னாப்பிரிக்காவில் போராளியாக இருந்த 20 ஆண்டுகளாலும் உருவாக்கப்பட்டவர். அதுபோன்ற சூழ்நிலைகள் இனி யாருக்கும் வாய்க்காது. எனவே, இந்தியர்கள் தங்களுக்குள்ளேயே காந்தியைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான்.”

நைபால் சொன்னார், “இந்தியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதே இல்லை”. அதைத் தவறு என்று நிரூபிப்பதற்காவது நாம் நைபாலின் எழுத்துகளைப் படித்தாக வேண்டும்.

- ந.வினோத் குமார்,

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x