Last Updated : 05 Aug, 2018 08:50 AM

 

Published : 05 Aug 2018 08:50 AM
Last Updated : 05 Aug 2018 08:50 AM

இந்தியாவிலிருந்து பார்க்கும் அமெரிக்கா உண்மையான அமெரிக்கா அல்ல!- நாகேஸ்வரி அண்ணாமலை பேட்டி

தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.

‘அமெரிக்காவில் முதல் வேலை’, ‘அமெரிக்க அனுபவங்கள்’, ‘அமெரிக்காவின் மறுபக்கம்’ என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் (அடையாளம் பதிப்பகம்) அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, ‘ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்’, ‘பாலஸ்தீன இஸ்ரேல் போர்’, ‘போப் பிரான்சிஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள். 80 வயதைத் தொடவிருக்கும் நாகேஸ்வரி சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவருடைய அமெரிக்கப் புத்தகங்கள் பற்றி பேசினேன்.

வயதாக ஆக உடலளவிலும், மனதளவிலும் சோர்வடை வதாக பொதுவான அபிப்ராயம் இருக்கிறது. ஆனால், நீங்கள் 60 வயதுக்குப் பிறகுதான் எழுதத் தொடங்குகிறீர்கள்?

இளம் வயதிலேயே நிறைய சிந்திக்கக்கூடியவளாக இருந்தேன். அப்போதெல்லாம் எங்களூர் பெண்கள் வெளியூருக்குக் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப்படவில்லை. அப்பாவிடம் போராடிதான் படிக்கச் சென்றேன். அமெரிக்க வாழ்க்கை எனக்குள் பல்வேறு சிந்தனைகளை உருவாக்கியது. இந்தியா வரும்போதெல்லாம் அமெரிக்கா குறித்து இங்கே கேட்கக்கூடிய கேள்விகளும் யதார்த்தமும் வேறாக இருந்தது. அப்போதுதான் அமெரிக்கா குறித்து எழுத வேண்டும் என்று நினைத்தேன். எழுத ஆரம்பித்த பிறகு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

எழுத வேண்டியவற்றை எதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கிறீர்கள்?

‘அமெரிக்காவின் மறுபக்கம்’ எழுதும்போது அமெரிக்க சரித்திரங்களைப் படிக்கிறேன். அவர்கள் வாழ்வியலை நேரடியாகப் பார்க்கிறேன். நம் நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு இணையாகக் கறுப்பர்களுக்கு எதிரான வெறுப்பு அமெரிக்காவில் இருக்கிறது. வளமான நாடாக இருந்தாலும் நிறைய பிரச்சினைகள் அங்கேயும் இருக்கின்றன. அடுத்து, இஸ்ரேல் பிரச்சினையும் என்னைக் கடுமையாகப் பாதித்தது. வெளியிலிருந்து வந்த யூதர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அங்கிருக்கும் அரேபியர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றிவிட்டார்கள். புனிதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சகித்துக்கொள்ள முடியாத வன்முறையை வெளிப்படுத்துகிறார்கள். யூதர்களுக்கு முஸ்லிம்களோடுதான் என்றில்லை, யூதர்களுக்கு கிறிஸ்தவர்களோடும் பிரச்சினைதான். இயேசுவை யூதர்கள் கொன்றார்கள் என்பதற்காகக் கிறிஸ்தவர்களுக்கு யூதர்கள் மீது பகை. இயேசுவே ஒரு யூதர்தான். என்னவொரு முரண் பாருங்கள்! உலகத்தில் நியாயமில்லாமல் நடக்கும் விஷயங்களெல்லாம் என்னை ரொம்பவே பாதிக்கும். அதைப் பற்றி எனது எண்ணங்களை யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்று தோன்றும். அப்படித்தான் எனது பாதையைத் தீர்மானிக்கிறேன்.

இந்தியர்களுக்கு அமெரிக்கா ஒரு கனவுப் பிரதேசமாக இருக்கிறது. இந்தியர்களின் மரபார்ந்த சிந்தனை வழியாக அமெரிக்காவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நம் சிந்தனையில் இருக்கும் அமெரிக்காவும் யதார்த்தமும் ஒன்றல்ல. இப்போதும் அமெரிக்காவில் பாலும் தேனும் ஓடுவதாக நினைக்கிறோம். அமெரிக்க ஏழைகள் அவசரத்துக்கு மருத்துவரைப் பார்ப்பது சாதாரண காரியம் அல்ல. மருத்துவத் துறையில் முன்னேறியிருப்பதற்கு நிகராக மருத்துவக் குளறுபடிக்குள்ளும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். கறுப்பினத்தவர்கள் பற்றி இந்தியர்களுக்கு சில அடிப்படை விஷயம் தெரிந்திருக்கும் என்றாலும்கூட யதார்த்ததில் கொடூரமாக இருக்கிறது. கறுப்பர்கள் அனுபவிக்கும் கொடுமைகள், பூர்வகுடிகளை அமெரிக்க வெள்ளையர்கள் அழித்த விஷயங்களெல்லாம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. மனதளவிலும் அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். சும்மா இருப்பவனிடம் துப்பாக்கி இருப்பதாகச் சொல்லி சுட்டுவிட்டுத் தற்காப்புக்காகச் சுட்டேன் என்பார்கள்.

இன வெறுப்பை ஒழிப்பதற்காக அங்கே என்னென்ன முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன?

ஒன்றுமே கிடையாது. மக்கள் மனதிலுமேகூட அப்படியான எண்ணங்கள் கிடையாது. இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களால் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு பொருளாதாரரீதியில் மேலே வர முடிகிறது. அமெரிக்காவில் அப்படியான வாய்ப்புகள் கறுப்பர்களுக்குக் கிடையாது.

இவ்வளவு பாகுபாடு இருக்கையில் அமெரிக்காவால் எப்படி உயர்ந்து நிற்க முடிகிறது?

சில குளறுபடிகள் இருந்தாலும்கூட நம்மோடு ஒப்பிடும்போது அவர்களின் நீதி அமைப்பு மேம்பட்டதாக இருக்கிறது. ஒருவருக்கு வேலை கொடுப்பதற்காக சலுகை எதிர்பார்த்தவரின் தொலைபேசி உரையாடலை மட்டுமே கொண்டு ஒரு வழக்கில் தண்டனை கொடுக்கிறார்கள். இங்கே இதெல்லாம் சாத்தியமா? அமெரிக்க மக்களிடையே சுத்தம் குறித்த புரிதல் அதிகம். எப்படியோ பழக்கிவிட்டார்கள். குப்பைகளைக் கையாள்வது மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளும், இரண்டு நிமிட நடைக்கு இடையே கழிப்பறையும் உண்டு. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளை மனதில் கொண்டே பேருந்துகள் வடிவமைக்கப்படுகின்றன. இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியவை. உணவு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றில் அவர்களைப் பின்பற்றவே கூடாது என்பேன்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் என்றால் அமெரிக்காவில் பேஸ்பால். பைப் திருகுவதில்கூட வலது இடது மாற்றம். ஸ்விட்ச் போடுவதில் மேல் கீழ் மாற்றம். இதெல்லாம் அமெரிக்கர்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான மனநிலையில் செயல்படுவதன் வெளிப்பாடுதானா?

பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது எல்லா விதத்திலும் அவர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு சமூகமாக அமெரிக்காவைக் காட்ட வேண்டும் என்ற நினைப்பு அமெரிக்காவுக்கு இருந்தது. அதன் விளைவுகள்தான் இதெல்லாம். ஆனால், பிரிட்டிஷாருடன் அமெரிக்கர்களுக்குப் பகை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அமெரிக்கா பின்தங்கி இருந்தபோது பிரிட்டிஷாரிடமிருந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார்கள். அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இன்றும் நெருக்கம் உண்டு. அமெரிக்கர்கள் லண்டன் போவதெல்லாம் சுலபமானது, எளிதில் விசா கிடைக்கும். தொப்புள்கொடி உறவுபோல இருவருக்கும் ஒரு பந்தம் தொடர்கிறது.

ரீகன், புஷ், கிளிண்டன், ஒபாமா என இவர்கள் வழியே நீங்கள் அமெரிக்காவைப் பார்க்கும் விதம் முக்கியமான ஒன்று. இப்போது ட்ரம்ப் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒபாமா செய்த சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் ஒபாமா செய்தார் என்ற ஒரே காரணத்துக்காகவே அதை மாற்றிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். ஒபாமா ஆட்சியின்போது வங்கிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தார். அதை ட்ரம்ப் மாற்றிவிட்டார். சுற்றுச்சூழல் துறையிலும் அப்படியே. பிற நாடுகளைப் பகைத்துக்கொள்வதும் அதிகமாகியிருக்கிறது. ஒழுக்கத்திலும் ரொம்ப மோசம். ஆனால், இன்னும் அவருக்கான ஆதரவு இருக்கிறது. “தெருவில் வைத்து ஒருவரை நான் சுட்டால்கூட மக்கள் என்னை ஆதரிப்பார்கள்” என்கிறார் ட்ரம்ப். இப்போது ட்ரம்பின் அடுத்த ஆட்சிக்காலம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது.

பெண்ணியம் குறித்து நிறைய புகார்களோடு எழுதியிருக்கிறீர்களே?

ஆமாம். பெண்ணியம் பேசப்பட்ட பிறகு அமெரிக்கா, கலாச்சாரத்தில் எண்ணற்ற பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. ஆண்களைப் போல நாங்களும் போரின் முன்வரிசையில் நின்று சண்டையிடுவோம் என்கிறார்கள் பெண்கள். வீட்டைக் காலிசெய்யும்போது பொருட்களைத் தூக்க ஆண்களால்தான் முடியும். பெண்களால் முடியாது. முடியாத வேலையைப் பெண்கள் செய்ய வேண்டாமென்கிறேன். சமூகம் இருவரையும் ஒன்றாக மதிக்க வேண்டும், இருவருக்கும் சமமான உரிமையைக் கொடுக்க வேண்டும் என்று பேசுவதற்குப் பதிலாக இவர்கள் பேசும் பெண்ணியம் பெண்களின் மனநிலையைப் பெரிதும் பாதித்துவிட்டது. கல்யாணத்துக்கு முன்பாக சேர்ந்து வாழ்வதும், கல்யாணத்துக்குப் பிறகு பிரிந்து வாழ்வதும் சகஜமாகிவருகிறது. அதை நாமும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறோம். இது சமூகத்துக்கான கேடு. முக்கியமாக, இதுபோன்ற உறவுகளால் குழந்தைகள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். கலாச்சாரரீதியாக சீர்கெடுவதால் சமூகம் எவ்வளவு மோசமான நிலைக்குச் செல்லும் என்பதற்கு முன்னுதாரணமாக அமெரிக்கா இருக்கிறது. பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பலியாகக் கூடாது.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x