Published : 20 Jul 2018 09:56 AM
Last Updated : 20 Jul 2018 09:56 AM

பார்த்திபன் கனவு 39: கடற் பிரயாணம்

இளவரசன் விக்கிரமனை ஏற்றிக் கொண்டு கிளம்பிய கப்பல் சீக்கிரத்திலேயே வேகம் அடைந்து கிழக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரக் காட்சிகளும், கோவில் கோபுரங்களும், மரங்களின் உச்சிகளும் மறைந்துவிட்டன. கரை ஓரத்தில் வெண்மையான நுரைகளுடனும் இரைச்சல்களுடனும் எழுந்து விழுந்து கொண்டிருந்த சிற்றலைகள் இப்போது காணப்படவில்லை. கடல் நீர் தூய நீல நிறமாயிருந்தது. அந்த நீல நிறப் பரப்பிலே பெரும் பள்ளங்களும் மேடுகளும் பெருமூச்சு விட்டுக் கொண்டு மேலே எழும்பியும் கீழே விழுந்தும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. அதே சமயத்தில் துயரம் நிறைந்த ‘ஹோ’ என்ற இடைவிடாத புலம்பல் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது.

இவ்விதம் விக்கிரமன் வெளியே கண்ட காட்சியானது அவனுடைய உள்ளத்தின் நிலைமையைப் பிரதிபலிப்பதாயிருந்தது. கடலின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் எல்லையற்ற மோன அமைதியைப் போல் அவனுடைய இருதயத்தின் அடிவாரத்திலும் விவரிக்கவொண்ணாத பரிபூர்ண சாந்தி நிலவிற்று. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தின் மேற்பரப்பில் என்னவெல்லாமோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்து கொந்தளிப்பை உண்டாக்கின.

பார்த்திப மகாராஜா சோழ நாட்டின் மேன்மையைக் குறித்துத் தாம் கண்ட கனவுகளைப் பற்றிச் சொன்னதெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன. கடற்பிரயாணம் செய்ய வேண்டுமென்று இளம்பிராயத்திலிருந்து அவனுடைய மனத்தில் குடி கொண்டிருந்த ஆசையும் நினைவுக்கு வந்தது. அந்த ஆசைதான், அடடா என்ன வினோதமான முறையில் இன்று நிறைவேறுகிறது? புலிக்கொடி கம்பீரமாகப் பறக்கும் பெரிய பெரிய கப்பல்களில் சோழநாட்டு வீரர் படைகளுடன் பிரயாணம் செய்து கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களிலெல்லாம் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்ற மனோரதத்துக்கும், இன்று பல்லவர்களின் சிங்கக் கொடி பறக்கும் கப்பலில் கையும் காலும் சங்கிலியால் கட்டுண்டு தேசப் பிரஷ்டனாய்ப் பிரயாணம் செய்வதற்கும் எவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு தூரம்!

இப்படி விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருந்த போதே கப்பலின் தலைவன் சில ஆட்களுடன் அங்கு வந்து விக்கிரமனைப் பிணித்திருந்த சங்கிலிகளை எடுக்கச் செய்தான். “இது ஏன்?” என்று விக்கிரமன் வினவ, “சக்கரவர்த்தியின் ஆணை?” என்றான் கப்பல் தலைவன். “என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று விக்கிரமன் கேட்டதற்கு, “இங்கிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்தில் நடுக்கடலிலே ஒரு தீவு இருக்கிறது. அதன் அருகே தங்களை இறக்கி விட்டுவிட வேண்டுமென்று கட்டளை!” என்று மறுமொழி வந்தது, “அங்கே வசிப்பவர்கள் யார்?” என்று விக்கிரமன் மேலும் கேட்டான். “அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தீவுக்குப் போய்ச் சேரும் வரையில், இந்தக் கப்பலுக்குள்ளே தாங்கள் சுயேச்சையாக எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் தப்பிச் செல்வதற்கு மட்டும் பிரயத்தனம் செய்யக் கூடாது. செய்தால் மறுபடியும் தலையிடும்படி நேரும்” என்றான் கப்பல் தலைவன்.

விக்கிரமன் கப்பலுக்குள்ளே அங்குமிங்கும் சிறிது நேரம் அலைந்தான். மாலுமிகளுடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்ததில் ஒன்றும் பிரயோஜனம் ஏற்படவில்லை. அவர்கள் எல்லாரும் விக்கிரமன் சம்பந்தப்பட்டவரை ஊமைகளாகவேயிருந்தனர். பின்னர், கப்பல் மேல் தளத்தின் ஓரமாக அவன் வந்து, வானையும் கடலையும் நோக்கிய வண்ணம் முன்போலவே சிந்தனையில் ஆழ்ந்தான்.

அன்னை அருள்மொழியின் நினைவுதான் எல்லாவற்றிற்கும் முன்னால் நின்றது. அவர் இச்சமயம் என்ன செய்து கொண்டிருப்பார்? என்ன எண்ணிக் கொண்டிருப்பார்? தன்னுடைய முயற்சி நிஷ்பலனாய்ப் போனது பற்றி ஏமாற்றமடைந்திருப்பாரா? பல்லவ சக்கரவர்த்தியின் முன்னிலையிலே தான் சிறிதும் பணிந்து போகாமல் பேசிய வீர வார்த்தைகளைக் கேட்டுப் பெருமையடைந்திருப்பாரா? தன்னுடைய பிரிவைக் குறித்து வருத்தப்படுவாரா? எப்படியும் அவருக்கு ஆறுதல் கூறச் சிவனடியார் போயிருப்பாரல்லவா?

உடனே, சிவனடியாரின் ஞாபகம் வந்தது. கப்பல் கரையை விட்டுக் கிளம்பிய தருணத்தில் அந்தப் பெரியவர் எங்கிருந்தோ வந்து குதித்துத் தமது திருக்கரத்தை நீட்டி ஆசீர்வாதம் செய்தாரே? அவருக்குத்தான் நம்மிடத்தில் எவ்வளவு அன்பு!

சிவனடியாரைப் பற்றி நினைக்கும்போதே மற்றோர் உருவம் விக்கிரமனுடைய மனக்கண் முன் தோன்றியது. அது ஒரு பெண்ணின் உருவம். முதல் நாள் காஞ்சிபுரத்து வீதியில் பார்த்த அந்தப் பெண் மறுநாள் மாமல்லபுரத்துக் கடற்கரைக்கு எப்படி வந்தாள்? அவள் யாராயிருக்கும்? ஆகா அவளுடைய கண்கள்தான் எவ்வளவு நீண்டு படர்ந்திருந்தன? அந்தக் கண்களிலே கண்ணீர் துளித்து நின்ற காரணம் என்ன? தன்னிடத்தில் உள்ள இரக்கத்தினாலா? முன்பின் தெரியாத அந்தப் பெண்ணுக்குத் தன்மேல் இரக்கம் உண்டாவானேன்? இல்லாவிட்டால் தன்னை எதற்காக அவ்வளவு கனிவுடன் பார்க்க வேண்டும்?

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x